வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரத்தில் விவசாயிகள் ரெயில் மறியல் செய்ய முயற்சி

வறட்சி நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரத்தில் விவசாயிகள் ரெயில் மறியல் செய்ய முயன்றனர்.

Update: 2017-05-16 22:45 GMT
சிதம்பரம்,

காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக்குழு உடனடியாக அமைத்திட வேண்டும், வறட்சியால் காய்ந்து கருகிய பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், தரிசாக போடப்பட்ட நிலத்திற்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரமும், உழவு தொழிலாளிகளின் குடும்பத்துக்கு ரூ.15 ஆயிரமும் இழப்பீடு வழங்குதல், பயிர்கள் கருகியதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் வழங்கிட வேண்டும், ஆற்று மணல் விற்பனையை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7 நாட்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று காவிரி உரிமை மீட்பு குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த போராட்டம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 15–ந்தேதி முதல் 21–ந்தேதி வரையில் நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

ரெயில் மறியல் செய்ய முயற்சி

அதன்படி, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. அதன்படி மதியம் 12.30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிப்பதற்காக சிதம்பரம் ரெயில் நிலையத்திற்கு தமிழ்தேசிய பேரியக்க பொது செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு வந்தனர்.

இந்த நிலையில், ரெயில் நிலையம் அருகே இவர்களை, அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ரெயில் நிலையம் முன்பு, விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் வீராணம் ஏரி விவசாய சங்க தலைவர் பாலு, கவுரவ தலைவர் வைத்தியநாதன், துணைதலைவர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்