போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்: 2–வது நாளாக பொதுமக்கள் தவிப்பு

போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் எதிரொலியாக 2–வது நாளாக பொதுமக்கள் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 50 சதவீத பஸ்கள் ஓடவில்லை.

Update: 2017-05-16 23:00 GMT
திண்டுக்கல்


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான 13–வது ஊதிய உயர்வை வழங்குவது, ஓய்வூதியர்களுக்கு நிலுவைத்தொகையை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன. இதையொட்டி, பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்திலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. நேற்று முன்தினம் சுமார் 60 சதவீதம் வரை பஸ்கள் இயக்கப்பட்டன. குறிப்பாக மாலை பொழுதுக்கு பிறகு ஒட்டுமொத்த பஸ்களும் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

பிறகு, நேற்று அதிகாலை 4 மணிக்கு மீண்டும் அரசு பஸ்கள் இயங்க தொடங்கின. ஆனால், நேற்று முன்தினம் இயக்கப்பட்ட அரசு பஸ்களை விட நேற்று குறைவான பஸ்களே இயங்கின. மொத்தம் உள்ள 8 பணிமனைகளில் இருந்து 228 பஸ்கள் மட்டும் ஓட்டின. சுமார் 50 சதவீத பஸ்கள் ஓடவில்லை.

பொதுமக்கள் தவிப்பு


பெரும்பாலான டிரைவர்களும், கண்டக்டர்களும் பணிக்கு வராததால் தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அரசு பஸ்களை இயக்கினர். இதுபோக தனியார் பஸ்கள் கணிசமான அளவில் இயங்கின. நீண்ட தூர பயணங்களுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. கிராம பகுதிகளுக்கு அரசு டவுண் பஸ்கள் சென்றன. பஸ் நிலையங்களுக்கு வந்த அரசு பஸ்களை ஓட்ட தற்காலிக டிரைவர்கள் வந்த நிலையில் கண்டக்டர்கள் இன்றி சில பஸ்களை இயக்க முடியாமல் போனது.

இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் திட்டமிட்டபடி பயணங்களை மேற்கொள்ள முடியாமல் தவித்தனர். திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் சில இடங்களுக்கு நீண்ட நேரமாக பஸ்கள் இன்றி பயணிகள் காத்திருந்தனர்.

பெரும்பாலனோர் பயணம் மேற்கொள்வதையே தவிர்த்தனர். இதனால் திண்டுக்கல், கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பஸ் நிலையங்கள் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

ஆர்ப்பாட்டம்


இதற்கிடையே, திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். தொ.மு.ச. பொதுச்செயலாளர் சென்றாயன், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் பாஸ்கரன், சி.ஐ.டி.யு. செயலாளர் கே.ஆர்.கணேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சி.ஐ.டி.யு. மண்டல பொதுச்செயலாளர் ராஜாராம் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறும்போது, ‘எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். அதை விடுத்து தனியார் பஸ்கள் மூலமும், தற்காலிக ஊழியர்கள் மூலமும் பஸ்களை இயக்க நினைப்பது மக்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணும். குறிப்பாக, தற்காலிக டிரைவர்கள் பஸ்களை சரியாக இயக்குவார்களா? என்பது கேள்விக்குறிதான். எனவே, போக்குவரத்து தொழிற்சங்கங்களை அழைத்து பேசி சரியான தீர்வுகாண அரசு முன்வர வேண்டும்’ என்றார்.

போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அசம்பாவிதங்களை தவிர்க்க பணிமனைகள், பஸ்நிலையங்களில் 2–வது நாளாக நேற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்