பாவூர்சத்திரம் பகுதியில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம்

பாவூர்சத்திரம் பகுதியில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2017-05-16 20:30 GMT
பாவூர்சத்திரம்,

பாவூர்சத்திரம் பகுதியில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தொடர் போராட்டம்

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம்– கடையம் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் அந்த கடையின் முன்பு சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 6–வது நாளாக நீடித்தது.

இதே போல் ஆவுடையானூரில் இருந்து அரியப்பபுரம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று 2–வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையின் முன்பு போதிய இடம் இல்லாததால் கடைக்கு எதிரே பொதுமக்கள் பந்தல் அமைத்தும், சமையல் செய்தும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு

பொதுமக்களின் இந்த போராட்டத்தால் அந்த 2 கடைகளும் தற்போது திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. பொதுமக்கள் போராட்டம் ஒருபுறம் இருக்க, மது குடிக்க வருபவர்கள் அருகில் உள்ள ஊர்களில் இருந்து மினி பஸ்களிலும், மோட்டார்சைக்கிள்களிலும் வந்து கடை திறக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

பொதுமக்கள் தொடர் போராட்டத்தால் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்