ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டி பெண்கள் இரட்டையர் பிரிவில் கரூரை சேர்ந்த 2 பேர் முதலிடம் பிடித்தனர்

கோடை விழாவை முன்னிட்டு ஊட்டியில் நேற்று சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டி நடந்தது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் கரூரை சேர்ந்த 2 பேர் முதலிடம் பிடித்தனர்.

Update: 2017-05-16 22:00 GMT
நீலகிரி


நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோடை விழா கடந்த 6–ந்தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 13–ந்தேதி ஊட்டியில் ரோஜா மலர் கண்காட்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் கோடை விழாவை முன்னிட்டு படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் பங்கு பெறும் படகு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான படகு போட்டி நேற்று ஊட்டி படகு இல்லத்தில் நடைபெற்றது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

கரூர் சுற்றுலா பயணிகள்


இந்த படகு போட்டிகள் ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள கவிதா, கல்பனா ஆகியோர் முதல் இடத்தையும். கோவையை சேர்ந்த ஜீவிதா, தேவி ஆகியோர் 2–ம் இடத்தையும், ஊட்டியை சேர்ந்த கவுசல்யா, கோபிகா ஆகியோர் 3–ம் இடத்தையும் பிடித்தனர்.

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் முதல் இடத்தை நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவா, சம்பத்குமார்ஆகியோர் பிடித்தனர். 2–ம் இடத்தை திருப்பூரை சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணா, ஜீவா ஆகியோர் பிடித்தனர். 3–ம் இடத்தை அருவங்காட்டை சேர்ந்த நவநீதன், சந்தோஷ் ஆகியோர் பிடித்தனர்.

கலப்பு இரட்டையர்


கலப்பு இரட்டையர் பிரிவில் சென்னையை சேர்ந்த தம்பதிகள் ரமேஷ், காந்திமதி முதல் இடத்தையும், ஊட்டியை சேர்ந்த பாபு, சுபாஷினி ஆகியோர் 2–ம் இடத்தையும், ஊட்டியை சேர்ந்த இப்ராஹிம், பானு ஆகியோர் பிடித்தனர். வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் பரிசுகள் வழங்கினார்.

இதில் சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் இயமவரம்பன், சுற்றுலா அலுவலர் ராஜன், படகு இல்ல மேலாளர் தினேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்த கரூர் பெண்கள் கவிதா, கல்பனா ஆகியோர் கூறியதாவது:–

கோடை வெயில் காரணமாக ஊட்டியை சுற்றி பார்க்க வந்தோம். ஊட்டி மிகவும் அழகாக உள்ளது. இந்த நிலையில் ஊட்டி படகு இல்லத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்