ஆனைமலையில் மதுக்கடையை அகற்றக்கோரி தர்ணா போராட்டம்

ஆனைமலையில் மதுக்கடையை அகற்றக்கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Update: 2017-05-15 22:15 GMT
கோவை


ஆனைமலை இந்திரா நகரில், பூலாங்கிணறு செல்லும் சாலையில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த கடையால் அந்த பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.

இதனிடையே மது அருந்துபவர்கள் போதையில் சாலைக்கு வருவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே மதுக்கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மதுக்கடை அகற்றப்படவில்லை.

தர்ணா போராட்டம்


இதைத்தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் அப்பன்குமார் தலைமையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர், பா.ஜனதா கட்சியினர், இந்திய தவ்ஹீத் ஜமாத் அத் நிர்வாகிகள் மற்றும் 500–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மதுக்கடையை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் மதுக்கடை அருகில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜன், டாஸ்மாக் தாசில்தார் வெங்கடாசலம் மற்றும் அதிகாரிகள், போலீசார் விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அகற்ற நடவடிக்கை


அப்போது மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் தாசில்தார் வெங்கடாசலம் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக ஆனைமலையில் இந்திரா நகரில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்