குடிநீர் வழங்கக்கோரி வடக்கு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குடிநீர் வழங்கக்கோரி வடக்கு ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-05-16 22:30 GMT
கோவை


பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்டது ஏ.நாகூர். இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஏ.நாகூருக்கு அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வாரத்துக்கு 3 நாட்கள் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. மேலும் ஆழ்துளை கிணறு மூலமும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஏ.நாகூருக்கு தண்ணீர் முறையாக வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. எனவே சீராக குடிநீர் வழங்கக்கோரி பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். பின்னர் பொதுமக்களிடம் ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குடிநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

குழாய்கள் பதிக்கும் பணி


இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–

ஏ.நாகூருக்கு அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீர் முறையாக வருவதில்லை. தற்போது தண்ணீர் வந்து 20 நாட்களுக்கு மேலாகி விட்டது. ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் வற்றி விட்டது.

இந்த நிலையில் கரப்பாடியில் இருந்து ஏ.நாகூருக்கு ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தண்ணீர் வழங்க ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே ஏ.நாகூருக்கு சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்