கோத்தகிரியில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்கின பயணிகள் நிம்மதி

கோத்தகிரியில் நேற்று பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்கின. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

Update: 2017-05-16 22:45 GMT
நீலகிரி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தங்களது 7–அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 15–ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்நாளில் பெரும்பாலான அரசு பஸ்கள் பணிமனையில் நிறுத்தப்பட்டன. மொத்தம் உள்ள 63 வழித்தடங்களில் இயங்கும் 49 பஸ்களில் 20 பஸ்கள் மட்டுமே இயங்கின. எனவே வெளியூர் செல்லும் பயணிகளும் உள்ளுர் கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகினர்.

நடவடிக்கை


இந்த நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிரைவர் மற்றும் நடத்துனராக பதிவு செய்து காத்திருப்போரை அழைத்து பஸ்களை இயக்கவும், மினி பஸ்களை குன்னூர், கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கு இயக்கவும் மாவட்ட கலெக்டர் சங்கர் மற்றும் குன்னூர் சாந்தி ராமு எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் நேற்று கோத்தகிரி பகுதியில் 40–க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

பயணிகள் நிம்மதி


மேலும் பஸ்கள் பாதுகாப்பாக சென்று வர போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இதனால் பயணிகள் சிரமமின்றி பயணம் செய்தனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், பஸ் கிடைக்காமல் அவதிப்பட்டோம். தற்போது பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படுவதால் நிம்மதி அடைந்துள்ளோம் என்றனார்.

 இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் கிருஷ்ணன் கூறியதாவது:– மொத்தம் பணிமனையில் உள்ள 49 பஸ்களில் பழனி, மைசூர் போன்ற தொலைதூர ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் தவிர 41 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்