கோவில்பட்டி அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு; டிரைவர் காயம்

கோவில்பட்டி அருகே அரசு பஸ் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் கண்ணாடி நொறுங்கி விழுந்ததில் டிரைவர் காயம் அடைந்தார்.

Update: 2017-05-16 21:00 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே அரசு பஸ் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் கண்ணாடி நொறுங்கி விழுந்ததில் டிரைவர் காயம் அடைந்தார்.

பஸ் மீது கல்வீச்சு

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு விரைவு பஸ் நேற்று முன்தினம் இரவில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த ஜான் குமார் (வயது 48) ஓட்டி வந்தார். அந்த பஸ்சில் கண்டக்டராக கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளைச் சேர்ந்த விசுவநாதன் (57) இருந்தார்.

நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு, பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 27 பயணிகள் இருந்தனர். கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூர் பெத்தேல் விடுதியை கடந்து பஸ் சென்றபோது, அங்கு மறைந்து நின்ற மர்மநபர்கள் திடீரென்று பஸ்சின் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினர்.

டிரைவர் காயம்

இதனால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கி விழுந்தது. இதில் டிரைவர் ஜான் குமாரின் கண் புருவத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் பஸ்சை சாலையோரமாக நிறுத்தினார். உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், மேற்கு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். கண்ணாடி உடைக்கப்பட்ட பஸ் நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்