திசையன்விளை அருகே பெண் கொலை: வீட்டுக்குள் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முயன்றதால் பரபரப்பு

திசையன்விளை அருகே பெண் கொலையில், அவரது உடலை வீட்டுக்குள் அடக்கம் செய்ய உறவினர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-05-16 21:00 GMT
திசையன்விளை,

திசையன்விளை அருகே பெண் கொலையில், அவரது உடலை வீட்டுக்குள் அடக்கம் செய்ய உறவினர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரத்தில் அவரது வீட்டை உறவினர்கள் சூறையாடினர்.

பெண் கொலை

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உபகார மாதாபுரத்தை சேர்ந்தவர் ஜான் பால் (வயது 32). பந்தல் தொழிலாளி. அவருடைய மனைவி பொன் இசக்கி (28). 2 குழந்தைகள் உள்ளனர். பொன் இசக்கிக்கும், அதே ஊரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் மாயாண்டிக்கும் (27) கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதனை அறிந்த ஜான்பால் தனது மனைவியை கண்டித்தும், இருவரும் தங்களது கள்ளக்காதலை தொடர்ந்தனர்.

இந்தநிலையில் கடந்த 14–ந் தேதி இரவில் பொன் இசக்கியும், மாயாண்டியும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது வேலை முடிந்து ஜான்பால் வீட்டுக்கு வந்தபோது, மாயாண்டி தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்த ஜான்பால், மனைவியை கண்டித்து வாக்குவாதம் செய்தார். தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஜான்பால், அரிவாளால் பொன் இசக்கியை வெட்டி கொலை செய்தார்.

உடல் ஒப்படைப்பு

பின்னர் அவர் திசையன்விளை போலீசில் சரண் அடைந்தார். பின்னர் பொன் இசக்கியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்ததும் நேற்று மதியம் பொன் இசக்கியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக் கொண்ட அவர்கள், இறுதி சடங்கு செய்வதற்காக உபகார மாதாபுரத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்றதும், பொன் இசக்கியின் உடலை ஜான் பால் வீட்டுக்குள் அடக்கம் செய்ய இருப்பதாக திசையன்விளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

வீடு சூறை

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், சப்–இன்ஸ்பெக்டர்கள் மதிபால், தங்க நாடார், கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பொன் இசக்கியின் உடலை வீட்டுக்குள் அடக்கம் செய்யக்கூடாது என்று போலீசார் தடுத்தனர்.

இதனால் போலீசாருக்கும், பொன் இசக்கியின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த பொன் இசக்கியின் உறவினர்கள் ஜான்பால் வீட்டை சூறையாடினர். இதில் அவரது வீட்டின் மேற்கூரை ஓடுகள் கல்வீசி உடைக்கப்பட்டது. வீட்டில் இருந்த பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டது. பின்னர் போலீசாரின் எச்சரிக்கையை தொடர்ந்து ஜான்பால் வீட்டுக்கு பின்புறம் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் பொன் இசக்கியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவத்தையொட்டி அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்