கலெக்டர் அலுவலக மாடியில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு

நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக மாடியில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவர் ஏற்கனவே இருமுறை தீக்குளிக்க முயன்றவர் ஆவார்.

Update: 2017-05-15 23:15 GMT
நாகர்கோவில்,

வீயன்னூர் அருகே உள்ள ஆலங்கோட்டுவிளையை சேர்ந்தவர் திரிவிக்ரமதாஸ் (வயது 45), தொழிலாளி. இவரது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக கூறியும், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரிவிக்ரமதாஸ் புகார் மனு அளித்தார். மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார். இதுதவிர அங்கு ஏற்கனவே இருமுறை தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்து எச்சரித்து அனுப்பினார்கள்.

இந்த நிலையில் திரிவிக்ரமதாஸ் நேற்று காலை மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென அவர், கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் மாடிக்கு வேகமாக சென்று மாடிக்கதவை பூட்டிக்கொண்டார்.

தற்கொலை மிரட்டல்


பின்னர் மொட்டை மாடியின் தடுப்புசுவர் மீது ஏறி அமர்ந்தபடி, தனது கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் இங்கிருந்து (கட்டிடத்தின் மாடியில் இருந்து) குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கத்தினார். இதைக்கேட்டு கலெக்டர் அலுவலக ஊழியர்களும், பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் அங்கு விரைந்து சென்று திரிவிக்ரமதாசை கீழே இறங்கி வரும்படி கூறினார்கள். மேலும், திரிவிக்ரமதாசை செல்போனில் தொடர்புகொண்டும் தற்கொலை முயற்சியை கைவிட்டுவிட்டு கீழே வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விட்டபடியே சுவரில் அமர்ந்திருந்தார். தான் கொண்டு வந்த மனுவையும் மேலிருந்து கீழே வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து நாகர்கோவில் தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு திரிவிக்ரமதாசை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது தன்னை காப்பாற்ற யாரேனும் மாடிக்கு வந்தால் தான்கொண்டு வந்த கத்தியால் கழுத்தை அறுத்துக்கொல்வேன் என்றும் மிரட்டினார். இதனையடுத்து போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் தங்களது சீருடைக்கு பதிலாக வேறு உடை அணிந்துகொண்டு மாடிக்கு சென்றனர்.

தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்


பின்னர் மாடிக்கதவை உடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் ஓடிச் சென்று மாடியின் தடுப்பு சுவரில் அமர்ந்திருந்த திரிவிக்ரமதாசை லாவகமாக பிடித்து மீட்டனர். இந்த மீட்பு பணி சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. அதன் பிறகு அவர், மாடியில் இருந்து கீழே அழைத்துவரப்பட்டார். இதனையடுத்து அவர் நேசமணிநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்