முக்கிய ஊர்களுக்கு குறைந்த பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி

குமரி மாவட்டத்தில் முக்கிய ஊர்களுக்கு குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.

Update: 2017-05-15 23:00 GMT
நாகர்கோவில்,

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கான 13–வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே மாதம் 15–ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்து இருந்தனர்.

இதையடுத்து போக்குவரத்துக்கழக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தமிழக அரசு 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முன்தினம் மாலையில் இருந்து தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

குமரி மாவட்டத்திலும் போராட்டம் தொடங்கியது. குமரி மாவட்டத்தில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினரைத் தவிர 5 ஆயிரம் பேர் பங்கேற்க இருப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகளால் தெரிவிக்கப்பட்டது.

பஸ் நிலையங்களில் காத்திருந்தனர்


இதனால் நேற்று முன்தினம் மாலையிலேயே பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையே நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு அரசு பஸ் மீது கல்வீசப்பட்டது. இதனால் சில வழித்தடங்களில் பஸ்களே இயங்கவில்லை.

ஓடிய பஸ்களில் வழக்கத்தைவிட அதிகமாக கூட்டம் காணப்பட்டது. முன்கூட்டியே வேலை நிறுத்தப்போராட்டத்தை போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தொடங்கி விட்டதால் வேலைக்கு சென்றவர்கள், வெளியூர் சென்றவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். எனவே மணிக்கணக்கில் ஆண்களும், பெண்களும் நேற்று முன்தினம் இரவில் பஸ் நிலையங்களில் காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் ஆட்டோக்களை வாடகைக்கு பிடித்து வீடு திரும்பினர்.

குறைவான எண்ணிக்கையில்...


நேற்றும் இதே நிலைதான் இருந்தது. வழக்கமாக அதிகாலை 3 மணி, 4 மணியில் இருந்து தொலைதூர பஸ்கள் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து ஓடத்தொடங்கும், அதிகாலை 5 மணியில் இருந்து வடசேரி, அண்ணா பஸ் நிலையங்களில் பெரும்பாலான பஸ்கள் இயங்கும். ஆனால் நேற்று முதல் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்ததாலும், பெரும்பாலான டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு வராததாலும் காலை 6 மணி வரை அரசு போக்குவரத்துக்கழக டெப்போக்களில் இருந்து பஸ்கள் வெளியே செல்லவில்லை.

6 மணிக்குப்பிறகுதான் போராட்டத்துக்கு ஆதரவில்லாத தொழிற்சங்க நிர்வாகிகளைக் கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் சில வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்களுக்கு ரோந்து வாகன போலீசார் பாதுகாப்புக்காக சென்றனர். காலையில் மிகக்குறைவான எண்ணிக்கையில்தான் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. முதலில் குமரி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. பின்னர் நாகர்கோவில்– திருநெல்வேலி என்ட் டூ என்ட் பஸ்கள், மதுரை, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு 2 அல்லது 3 பஸ்கள் சேர்ந்தாற்போல் இயக்கப்பட்டன.

750 பஸ்கள்


குமரி மாவட்டத்தில் உள்ள 12 அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் இருந்து 750–க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று காலை 9 மணி வரை நிலவரப்படி 200 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மினி பஸ்கள், ஆட்டோ, கார் போன்றவை வழக்கம் போல் ஓடின. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒன்றிரண்டு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. அவற்றிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல் நாகர்கோவிலில் இருந்து மினி பஸ்கள் வள்ளியூர் வரை இயக்கப்பட்டன.

திருநெல்வேலி மற்றும் மதுரை போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் குமரியில் இருந்த வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடியவர்கள் பரிதவிப்புக்கு ஆளானார்கள். அதேபோல் வெளி மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா வந்த பயணிகளும், ஆன்மிக பயணம் மேற்கொண்டவர்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பஸ் நிலையங்களில் காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட சில வெளியூர்களைச் சேர்ந்த பயணிகள் நேற்று முன்தினத்தில் இருந்தே வடசேரி பஸ் நிலையத்தில் காத்துக் கிடந்ததை காண முடிந்தது. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பஸ் நிலையங்களில் வழக்கத்தைவிட குறைவான அளவிலேயே பயணிகள் கூட்டம் இருந்தது. குமரி மாவட்டத்துக்குள் சென்றுவர பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களையும், ஆட்டோ, கார் போன்றவற்றையும் நேற்று பயன்படுத்தினர். இந்த போராட்டத்தையொட்டி பலர் தங்களது வெளியூர் பயணத்தையே ரத்து செய்திருந்தனர்.

மார்த்தாண்டம்


மார்த்தாண்டத்தில் நேற்று பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மினி பஸ்கள், வேன், ஆட்டோ போன்ற வாகனங்களில் பொதுமக்கள் பயணம் செய்தனர். சில மினி பஸ்களில் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

குலசேகரம் பகுதியில் அரசு பஸ்கள் ஓரளவு ஓடின. அத்துடன் மினி பஸ்களும், வேன், ஆட்டோ போன்ற வாகனங்களும் வழக்கம்போல் இயங்கியதால் பொதுமக்கள் வழக்கம் போல் தங்களது அன்றாட பணிக்கு சென்றனர்.

அருமனை பகுதியில் குறைந்த அளவில் பஸ்கள் மட்டுமே ஓடின. இதனால், அந்த பகுதி மக்கள் போக்குவரத்து வசதியின்றி மிகவும் பாதிக்கப்பட்டனர்.

களியக்காவிளை பகுதியில் வழக்கமாக இயக்கப்படும் தமிழக பஸ்களில், 20 சதவீத பஸ்கள் மட்டுமே ஓடின. இதுபோல், குளச்சல், தக்கலை, அழகியமண்டபம் போன்ற பகுதிகளில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை.

402 பஸ்கள்


இருப்பினும் நேற்று காலை 11 மணி நிலவரப்படி 352 பஸ்களும், மாலை நிலவரப்படி 402 பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால் உள்மாவட்டம் மட்டுமின்றி, வெளிமாவட்டப் பகுதிகளான திருப்பூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கும், கேரளாவில் திருவனந்தபுரம் பகுதிகளுக்கு மட்டுமே நேற்று மாலை வரை பஸ்கள் இயக்கப்பட்டன.

வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி நேற்று முன்தினத்தில் இருந்து அனைத்து அரசு போக்குவரத்துக்கழக டெப்போக்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் நேற்று காலையில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்