போக்குவரத்து கழக பணிமனை கட்டிடத்தில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல்

குழித்துறை அருகே உள்ள போக்குவரத்து கழக பணிமனை கட்டிடத்தில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது, அ.தி.மு.க.வினருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை சமரசம் செய்ய சென்ற போலீஸ்காரர் காயமடைந்தார்.;

Update: 2017-05-15 23:00 GMT
களியக்காவிளை,

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக குமரி மாவட்டத்தில் நேற்று சரிவர பஸ்கள் ஓடாததால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே படந்தாலுமூட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நேற்று முன்தினம் இரவே பஸ்களை நிறுத்திவிட்டு டிரைவர்கள் போராட்டத்தை தொடங்கினர்.

இந்தநிலையில், நேற்று நித்திரவிளை பகுதியை சேர்ந்த வில்சன் என்ற ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் பணிமனைக்கு வந்தார்.

தற்கொலை மிரட்டல்


அவர், பணிமனை கட்டிடத்தின் மேல் பகுதிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதனை பார்த்த தொழிற்சங்கத்தினர் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி கீழே இறங்கி வருமாறு வலியுறுத்தினர். ஆனால், அவர் கீழே இறங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க.வினர் சிலர் அந்த பணிமனைக்குள் நுழைந்தனர். அவர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்த வில்சனை கீழே இறங்கும்படி கூறினர். மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் அவரை கைது செய்யும்படி கூறினார்கள். இதற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொழிற்சங்கத்துக்கு சம்பந்தப்படாத அ.தி.மு.க. நிர்வாகிகள் பணிமனைக்குள் எப்படி நுழையலாம் என்று கண்டித்து, அ.தி.மு.க. நிர்வாகிகளை அங்கிருந்து வெளியே செல்லும்படி கூறினர்.

தள்ளுமுள்ளு


இதனால், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கை கலப்பாக மாறியது. உடனே, அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் இருதரப்பினரையும் சமரசப்படுத்தினார்கள். அப்போது, ஏற்பட்ட பிரச்சினையில் ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார்.

நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்வதை உணர்ந்த போலீசார் உடனடியாக அ.தி.மு.க. நிர்வாகிகளை அங்கிருந்து வெளியேற்றினர். தொடர்ந்து, போலீசாரும், தொழிற்சங்கத்தினரும் பணிமனை கட்டிடத்தின் மாடிக்கு சென்று தற்கொலை மிரட்டல் விடுத்த வில்சனை சமாதானப்படுத்தி கீழே இறங்க வைத்தனர்.

ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லை


இதுகுறித்து டிரைவர் வில்சன் கூறுகையில், “நான் கடந்த 2015–ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். எனக்கு ரூ.14 லட்சம் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக பலமுறை அலுவலகத்திற்கு அலைந்தும் இதுவரை எனக்கு பணம் வழங்கப்படவில்லை. எனவே, அந்த பணத்தை உடனே வழங்க வேண்டும்“ என்றார்

மேலும் செய்திகள்