சூறைக்காற்றுடன் பலத்த மழை: சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கொத்தனார்-பெண் தொழிலாளி சாவு

பெரம்பலூர் அருகே சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தபோது, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கொத்தனார், பெண் தொழிலாளி இறந்தனர். இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த மேலும் 2 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-05-15 23:00 GMT
மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூரில், மரங்களை வெட்டி பலகைகளாக உருவாக்கும் பட்டறை ஒன்று இயங்கி வருகிறது. அதே பகுதியை சேர்ந்த சீமான் (வயது 41) இந்த பட்டறையை நடத்தி வருகிறார். இந்த பட்டறையின் பின்பகுதியில் பாதுகாப்பிற்காக சுற்றுச்சுவர் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.

தொழிலாளர்கள்

நேற்று கொல்கத்தாவை சேர்ந்த கொத்தனார்கள் மன்சூர்சேக் (37), அன்சூர்அலி (27) ஆகியோர் பட்டறைக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி பெரியார் நகரை சேர்ந்த ராமலிங்கம் மனைவி அன்பரசி (50), மணி மனைவி சின்னபிள்ளை (55), ஆறுமுகம் மனைவி மல்லிகா (50) மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த குபேல் (17) ஆகிய தொழிலாளர்கள் சிமெண்டு கலவை எடுத்து கொடுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3.30 மணியளவில் கொத்தனார் அன்சூர்அலி, தொழிலாளி குபேல் ஆகியோர் சாப்பிடுவதற்காக சென்று விட்டனர்.

சூறைக்காற்றில் சுவர் இடிந்தது

மற்றொரு கொத்தனார் மன்சூர்சேக் தொடர்ந்து செங்கற்களை அடுக்கி வைத்து, சிமெண்டு கலவையினால் ஒட்ட வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அன்பரசி, சின்னபிள்ளை, மல்லிகா ஆகியோர் சுவற்றின் அருகில் நின்று கொண்டு கொத்தனார் மன்சூர்சேக்கிற்கு சிமெண்டு கலவையை எடுத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வானில் கருமேகங்கள் திரண்டு சூறைக்காற்றுடன் பலத்த மழைபெய்ய ஆரம்பித்தது. இதனால் மன்சூர்சேக் அவசர அவசரமாக மீதமுள்ள பணிகளை முடித்து கொண்டிருந்தார். இந்தநிலையில் சூறைக்காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் புதிதாக கட்டப்பட்டு வரும் அந்த பட்டறையின் சுற்றுச்சுவர் திடீரென உள்பக்கமாக சரிந்து விழுந்தது. இதில் கொத்தனார் மன்சூர்சேக் மற்றும் பெண் தொழிலாளர்கள் அன்பரசி, சின்னபிள்ளை, மல்லிகா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி அய்யோ... அம்மா... என அலறினர்.

2 பேர் பலி

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து செங்கற்களை அகற்றி விட்டு, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கொத்தனார் மன்சூர்சேக், பெண் தொழிலாளி சின்னபிள்ளை ஆகியோர் இறந்து விட்டது தெரிய வந்தது.

மேலும் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அன்பரசி, மல்லிகாவை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்ததும் மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மன்சூர்சேக், சின்னபிள்ளை ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் விரைந்து வந்து, சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தினார். சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாக அங்கிருந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக அந்த பட்டறை உரிமையாளர் சீமானை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்