கும்பகோணம் பகுதியில் 7 அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு 2 டிரைவர்கள் காயம்

கும்பகோணம் பகுதியில் 7 அரசு பஸ்களின் கண்ணாடியை மர்ம நபர்கள் கல்வீசி உடைத்தனர். இதில் 2 டிரைவர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2017-05-15 23:00 GMT
கும்பகோணம்,

13–வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும். போக்குவரத்து துறையில் ஏற்பட்டு இருக்கும் நஷ்டத்திற்கு அரசே பொறுப்பேற்று அதை ஈடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தடையின்றி அரசு பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு


 இந்த நிலையில் நேற்று தஞ்சையில் இருந்து கும்பகோணத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை அழகுதுரை என்பவர் ஓட்டிவந்தார். கண்டக்டராக திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல்காரபட்டி கிராமத்தை சேர்ந்த மூக்கன் மகன் ராஜ்குமார்(வயது31) என்பவர் பணியில் இருந்தார். கும்பகோணம் பிடாரிகுளம் சாலையில் உள்ள ஒரு மருத்துவமனை அருகே வந்த போது யாரோ மர்ம நபர்கள் பஸ்சின் மீது கற்களை வீசி எறிந்தனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து டிரைவர் அழகுதுரைக்கு காயம் ஏற்பட்டது. உடன் அவருக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 காயம்


இதேபோல கும்பகோணம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கும்பகோணம் திருநாராயணபுரம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கியதில் பஸ் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இதில் பஸ் டிரைவர் கும்பகோணத்தை அடுத்துள்ள மருதாநல்லூர் கருப்பூரைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் செந்தில்குமாருக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கும்பகோணம் கிழக்கு, மேற்கு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கும்பகோணத்தில் இருந்து சென்னை சென்ற அரசு பஸ் சேங்கனூர் என்ற இடத்திலும், அணைக்கரையில் இருந்து கும்பகோணம், பந்தநல்லூர், ஆடுதுறை ஆகிய ஊர்களுக்கு சென்ற 3 அரசு பஸ்களும், கும்பகோணத்தில் இருந்து அய்யவாடி சென்ற அரசு பஸ் அய்யாவாடியிலும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் 5 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

மேலும் செய்திகள்