போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு பஸ்கள் ஓடவில்லை

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக புதுக்கோட்டையில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2017-05-15 23:00 GMT
புதுக்கோட்டை,

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 13–வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலையில் இருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர், ஆலங்குடி, பொன்னமராவதி ஆகிய போக்குவரத்து பணிமனைகளில் அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அண்ணா தொழிற்சங்கத்தினர் உதவியுடன் சில அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் மற்றும் நகர பஸ்கள் பெரும்பாலானவை இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர் பேட்டி


இந்நிலையில் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்தார். அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அனைத்து புறநகர் பஸ்களும் காலை முதலே இயங்கி வருவதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் பொதுமக்களின் வசதிக்காக 70 சதவீத தனியார் பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் எந்த இடத்திலும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட கலெக்டர் கணேஷ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் வைரமுத்து மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்