நெல்லையில் டாஸ்மாக் குடோனில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நெல்லையில், டாஸ்மாக் பணியாளர்கள் தங்களுக்கு மாற்றுப்பணி வழங்க வலியுறுத்தி டாஸ்மாக் குடோனில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-05-15 23:00 GMT
நெல்லை,

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் பணியிழந்தவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 13-ந்தேதி தமிழகம் முழுவதும் நெல்லை உள்பட 7 மண்டலங்களில் டாஸ்மாக் குடோனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் பணியிழந்த 20 ஆயிரம் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கும் வகையில் தற்போது இயங்கி வரும் மதுக்கடைகளில் உடனடியாக பணியமர்த்த வேண்டும். இல்லையென்றால் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

உள்ளிருப்பு போராட்டம்

இந்த நிலையில் நேற்று நெல்லை மேலப்பாளையம் அருகே முன்னீர்பள்ளத்தில் உள்ள டாஸ்மாக் குடோனுடன் இணைந்த மேலாளர் அலுவலக வளாகத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் குவிந்தனர். சி.ஐ.டி.யு. டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் குடோன் வளாகத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

இந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சரவண பெருமாள், பொருளாளர் இளமுருகு, மாநில குழு உறுப்பினர் சிவன்ராஜ், நிர்வாகிகள் மாரியப்பன், சுப்பையா, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதியம் அங்கேயே வரிசையில் நின்று சாப்பிட்டு விட்டு தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தையொட்டி டாஸ்மாக் குடோன் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்