தனியார் லாட்ஜில் வங்கி பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

புதுக்கோட்டையில் உள்ள தனியார் லாட்ஜில், வங்கி பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-05-15 23:15 GMT
புதுக்கோட்டை,

தஞ்சாவூர் மாவட்டம் சித்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகள் அருணா (வயது 26). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மகளிர் தங்கும் விடுதியில் தங்கி இருந்து, ஒரத்தநாட்டில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அதிகாரியாக வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி விடுதியில் இருந்து வெளியே சென்ற அருணா, வீட்டுக்கும் செல்லவில்லை, விடுதிக்கும் திரும்பவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாவை தேடி வந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில், இளம்பெண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக லாட்ஜ் ஊழியர்கள் புதுக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் லாட்ஜில் அறை எடுத்து தங்கும்போது அந்த பெண் கொடுத்திருந்த முகவரியை கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், பிணமாக கிடந்த பெண் அருணா என்பது தெரியவந்தது. பின்னர் அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து புதுக்கோட்டைக்கு வந்த அருணாவின் உறவினர்கள், லாட்ஜில் அருணா இருந்த அறையை திறக்க முயன்றனர். ஆனால் போலீசார் இதற்கு அனுமதி மறுத்து விட்டனர்.

உடலை வாங்க மறுப்பு

பின்னர் லாட்ஜ் அறையில், துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அருணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அருணாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அருணாவின் உடலை, அவரது உறவினர்களிடம் போலீசார் கொடுத்தனர்.

ஆனால், அருணாவின் தற்கொலைக்கு யார் காரணம் என்று தெரியும் வரை நாங்கள் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி, அவரது உடலை வாங்க மருத்துவமனையில் கூடியிருந்த அருணாவின் உறவினர்கள் மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்திய பிறகு, உறவினர்கள் அருணாவின் உடலை வாங்கி சென்றனர். அருணா தற்கொலைக்கான காரணம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்