கர்நாடகத்தில் கனமழைக்கு கர்ப்பிணி உள்பட 7 பேர் சாவு

கர்நாடகத்தில் பெய்த கனமழைக்கு கர்ப்பிணி உள்பட 7 பேர் உயிரிழந்தனர். கதக்கில் மழை வெள்ளத்தில் அரசு பஸ் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பஸ்சில் இருந்த பயணிகள் உள்பட 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டார்கள்.

Update: 2017-05-15 23:00 GMT
பெங்களூரு,

பெங்களூரு, கதக், விஜயாப்புரா, பல்லாரி, கொப்பல் உள்பட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலையில் இடி-மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை கொட்டி தீர்த்தது. மேலும் மழையுடன் பல மாவட்டங்களில் சூறைக்காற்றும் வீசியது. கதக் மாவட்டம் சிராஹட்டி தாலுகாவில் கனமழை பெய்தது. இதனால் சிராஹட்டி தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்கள் மழை நீர் கரைபுரண்டு ஓடி வெள்ளக்காடாக மாறியது.

இந்த நிலையில், நேற்று காலையில் கதக் மாவட்டம் லட்சுமேஷ்வராவில் இருந்து எல்லாபுராவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி. (அரசு) பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ் லட்சுமேஷ்வரா அருகே தொட்டூர் கிராமத்தில் வந்தபோது, அங்குள்ள தரைமட்ட பாலத்தை டிரைவர் கடந்து செல்ல முயன்றார். கனமழையின் காரணமாக அந்த பாலத்தை மூழ்கடித்தப்படி மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இதனை பொருட்படுத்தாமல் பஸ்சை டிரைவர் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

வெள்ளத்தில் சிக்கிய பஸ்

அப்போது கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் அரசு பஸ் சிக்கியது. அதே நேரத்தில் பாலத்தின் மீது அதிகப்படியான தண்ணீர் வந்ததால், வெள்ளத்தில் பஸ் அடித்து செல்லப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் பாலத்தை விட்டு கீழே இறங்கிய பஸ், தண்ணீரில் மூழ்கும் நிலைக்கு சென்றது. இதனை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனடியாக பஸ்சில் இருந்தவர்களை பத்திரமாக மீட்க கிராம மக்கள் நடவடிக்கை எடுத்தார்கள். நீண்ட நேரம் போராடி பஸ் டிரைவர், கண்டக்டர், ஒரு முதியவர் உள்பட பஸ்சில் இருந்த 5 பேரை மீட்டார்கள்.

இதுபற்றி அறிந்ததும் லட்சுமேஷ்வரா போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து வெள்ளத்தில் மூழ்கிய பஸ்சை வெளியே மீட்டு கொண்டு வந்தனர். பஸ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மூழ்கியபோது கிராம மக்கள் துரிதமாக செயல்பட்டதால் டிரைவர் உள்பட 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டது தெரியவந்து உள்ளது.

கர்ப்பிணி சாவு

இதற்கிடையே கதக் மாவட்டம் குனகுந்தா அருகே வசித்து வந்த பகிரப்பா சிவப்பா, விஜயாப்புரா மாவட்டம் முதேபிகால் பகுதியை சேர்ந்த பசப்பா(வயது 45), ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த தேவகிரி மடா(35) ஆகியோர் மழையின் போது மின்னல் தாக்கியதில் பலியானார்கள். மேலும் பல்லாரி மாவட்டம் கவுல்பஜார் அருகே நாகலகெரே கிராமத்தில் ஒரு வீட்டின் மேற்கூரை மீது வைத்திருந்த கற்கள் பலத்த காற்றுக்கு தூக்கி வீசப்பட்டன. இதில் அதே பகுதியை சேர்ந்த சிவு (12) என்ற சிறுவனின் தலையில் கற்கள் விழுந்தன. இதில் பலத்த காயமடைந்த அவன் பரிதாபமாக செத்தான். அதேப் போல் பாகல்கோட்டை மாவட்டம் கிரசூரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை மீது வைக்கப்பட்டு கற்கள் பலத்த காற்றுக்கு விழுந்ததில் தொழிலாளியின் மகள் தீபா கடேமணி(9) தலையில் படுகாயமடைந்து உயிரிழந்தாள்.

மேலும் கார்வார் மாவட்டம் பட்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மதினா காலனியை சேர்ந்த சுபியா என்பவர் தனது வீட்டின் ஜன்னல் அருகே நேற்று முன்தினம் இரவு படுத்து தூங்கினார். அப்போது மின்னல் தாக்கியதில் சுபியா உடல் கருகி செத்தார். சுபியாவுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. தற்போது அவர் 2 மாத கர்ப்பிணியாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

சுவர் இடிந்து சிறுவன் படுகாயம்

இதுதவிர பெங்களூருவில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு பல்வேறு இடங் களில் மரங்களும், மின்கம்பங் களும் முறிந்து விழுந்தன. இந்த நிலையில், பெங்களூரு-ஓசூர் ரோட்டில் உள்ள ஜான்சன் மார்க்கெட்டையொட்டி இருக்கும் மாநகராட்சி கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்ற எலகுண்டேயை சேர்ந்த கரீம்கான் (45) மற்றும் ஜுமான் ராஜா(10) ஆகியோர் மீது கட்டிட சுவர் விழுந்தது. இதனால் 2 பேரும் படுகாயம் அடைந்தார்கள். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கரீம்கான் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். தனியார் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுவன் ஜுமான் ராஜா சிகிச்சை பெற்று வருகிறான்.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழைக்கு கர்ப்பிணி உள்பட 7 பேர் பலியானதுடன், ஏராளமான மாடுகள், ஆடுகளும் மின்னல் தாக்கியதில் செத்தன. பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்று வீசியதால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன.

மேலும் செய்திகள்