புதுவை சட்டசபை இன்று கூடுகிறது, கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார்

புதுச்சேரி சட்டசபை இன்று (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது. கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார்.

Update: 2017-05-15 21:22 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10-30 மணிக்கு கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் என்பதால் கவர்னர் கிரண்பெடி சட்டசபையில் உரையாற்றுகிறார். இதற்காக அவர் காலை 10.30 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து கார் மூலம் புதுவை சட்டசபை வளாகத்திற்கு வருகிறார். அங்கு அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்.

அதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம், சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து கவர்னருக்கு வரவேற்பு அளிப்பார்கள். சட்டசபை மைய மண்டபத்திற்கு வரும் கவர்னர் கிரண்பெடி சபாநாயகர் இருக்கையில் அமர்வார். தொடர்ந்து சட்டசபையில் நிகழ்வுகள் தமிழ்தாய் வாழ்த்துகளுடன் தொடங்கும்.

கவர்னர் உரையாற்றுகிறார்

இதனை தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார். கவர்னரின் ஆங்கில உரையை சபாநாயகர் வைத்திலிங்கம் தமிழிலில் மொழிபெயர்த்து வாசிப்பார். அதன்பின்னர் கவர்னர் கிரண்பெடி சபையில் இருந்து விடைபெற்று செல்வார்.

இதனை தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி சபையில் கொண்டு வருவார். அதன் பின்னர் சபையில் முதல் நாள் நிகழ்வுகள் முடிவடையும்.

மோதல்

புதுவையில் கவர்னர் கிரண்பெடிக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து காங்கிரஸ் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டு டெல்லி சென்று கவர்னர் மீது ஜனாதிபதியை சந்தித்து புகார் தெரிவிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதே சமயம் கவர்னருக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் பங்கேற்றது. மேலும் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கவர்னர் பல்வேறு பகுதிளுக்குச் சென்று கள ஆய்வு செய்யும்போது எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்ற வகையில் அவர்களையும் கடும் விமர்சனம் செய்து வந்தார்.

இந்தநிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ, அன்பழகன் கவர்னர் கிரண்பெடி சட்டசபையில் உரையாற்ற வரும்போது தக்க பதிலடி கொடுப்போம் என்று கூறி இருந்தார். எனவே இன்று கூட்டப்படும் சட்டசபையில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.

போலீஸ் பாதுகாப்பு

இதையொட்டி சட்டசபை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டசபையை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தீவிர பரிசோதனைக்குப் பின் அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே சட்டசபைக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். 

மேலும் செய்திகள்