குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி நிலக்கோட்டையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி நிலக்கோட்டை பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-05-15 21:45 GMT
நிலக்கோட்டை

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு பருவ மழை முறையாக பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்துக்கு சென்றன. இதையொட்டி குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன. தண்ணீர் கேட்டு ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அலுவலகங்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நிலக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி நிலக்கோட்டை பஸ் நிலையம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளரும், ஆத்தூர் எம்.எல்.ஏ.வுமான இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அக்கறை இல்லை

தமிழகத்தில் தற்போது பினாமி ஆட்சி நடக்கிறது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவுவதால் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இதை சமாளிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலக்கோட்டை ஒன்றியத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது.

வைகைஆறு வறண்டதால் பல கிராமங்களில் தண்ணீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். தற்போது உள்ள அரசுக்கு பொதுமக்களின் மீது அக்கறை இல்லை. தி.மு.க. தலைமையில் விரைவில் ஆட்சி அமைவது உறுதி. 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காமல் தொழிலாளர்களை மத்திய அரசு இழுத்தடிக்கிறது. இதனால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் மாயாண்டி, செல்வராஜ், நகர செயலாளர் கருணாநிதி, ஆதிதிராவிடர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் கட்சியினர் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலங்களில் மனு கொடுத்தனர். 

மேலும் செய்திகள்