திருப்போரூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருப்போரூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், பாரை சூறையாடினர்.;

Update: 2017-05-15 22:30 GMT
திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த கொட்டைமேடு பகுதியில் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடையை மூடக்கோரி நேற்று மயிலை, இடங்குன்றம், கொட்டைமேடு, இராயமங்கலம் பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுக்கடை முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடையின் அருகில் உள்ள பாரில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருப்போரூர் போலீசார், பொதுமக்களை தடுத்து நிறுத்தினர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், திருப்போருர்-செங்கல்பட்டு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசாரின் சமரசத்தை ஏற்று சாலை மறியலை கைவிட்ட பொதுமக்கள், மூடி இருந்த மதுக்கடை மீது கற்களை வீசி தாக்கினர். இரும்பு கதவு, வெளியில் வைக்கப்பட்டு இருந்த தகரத்தை அடித்து நொறுக்கி கீழே தள்ளியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் மாமல்லபுரத்தில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் திருப்போரூர் வருவாய் துறையினர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் அந்த மதுக்கடையை மூடுவதற்கான நடகடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்