குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிகுடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.;

Update: 2017-05-15 19:40 GMT
வேப்பூர்,

வேப்பூர் அருகே உள்ளது நகர் கிராமம். இந்த கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவைக் காக அதேபகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுக்குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக அப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று குடிநீர் பிடித்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் தலைமையில் காலிகுடங்களுடன் திரண்டு வந்து நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகளிடம் பேசி குடிநீர் பிரச்சினையை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்