போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மாவட்டத்தில் அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயங்கின

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்

Update: 2017-05-15 23:00 GMT
கடலூர்,

ஊதிய உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வற்புறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் 15-ந்தேதி(நேற்று) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, நேற்று முன்தினமே பல இடங்களில் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

கடலூர் மாவட்டத்திலும், நேற்று முன்தினம் மாலை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் பஸ்கள் இன்றி பரிதவித்தனர். தொடர்ந்து நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

கடலூர் பஸ்நிலையம்

கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி போன்ற புறநகர் பகுதிகளுக்கு குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்பட்டன. ஆனால் உள்ளூர் பகுதிகளுக்கு ஓரளவு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். தனியார் பஸ்கள் 100 சதவீதம் முழுமையாக ஓடின. இதில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சில அரசு பஸ்களில் குறைந்த அளவிலேயே பயணிகள் சென்றதை காண முடிந்தது.

அரசு பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் ஓடியதால் அதை ஈடு செய்யும் வகையில் தனியார் மாற்று பஸ்கள், சுற்றுலா பஸ்கள் மற்றும் வேன்கள் சிறப்பு அனுமதியுடன் சென்னை போன்ற வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன.

பயணிகள் புகார்

தனியார் பஸ்களில் சென்னைக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை கட்டணம் வசூல் செய்யப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தனியார் பஸ் கண்டக்டர் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை. மேலும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

டிரைவர்-கண்டக்டர்கள் தேர்வு

மாலையில் தனியார் டிரைவர்கள் மற்றும் வேலைக்காக காத்திருக்கும் கண்டக்டர்கள் ஆகியோரை வரவழைத்து அவர்களில் சிறந்தவர்களை தேர்வு செய்து பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் மாலை நேரத்துக்கு பிறகு அரசு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் நேற்று 45 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடலூர் பணிமனையில் அண்ணாதொழிற்சங்க மாவட்ட செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையில் மண்டல செயலாளர் நவநீதகண்ணன், திருமலை மற்றும் நிர்வாகிகள் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

விருத்தாசலம்

விருத்தாசலத்தில் 2 பணிமனைகள் உள்ளன. தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, இங்கு பெரும்பாலான பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மாறாக அண்ணா தொழிலாளர்கள் ஊழியர் சங்கத்தினர், பணிநிரந்தரம் செய்யப்படாத தொழிலாளர்களை கொண்டு குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் விருத்தாசலம் பஸ்நிலையத்தில் காலையில் பெங்களூருக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இந்த நிலையில் அந்த பஸ்சின் டிரைவர் சரவணன்(வயது 48) என்பவர் பஸ்சை ஓட்ட முயன்றார். அப்போது அங்கு வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் சிலர், சரவணனுக்கு திடீரென மாலை அணிவித்தனர். இதனால் அவர் பஸ்சை, இயக்காமல் பணிமனை 1-ல் கொண்டுவந்து விட்டார்.

தொழிலாளர்களின் இந்த நடவடிக்கையை அறிந்த, அ.தி.மு.க.(அம்மா)வினர் அங்கு திரண்டு வந்தனர். அப்போது அங்கிருந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதே போன்று, பணிமனை 2-ன் உள்ளே அ.தி.மு.க.வினர் சிலர் இருந்தனர். இவர்கள் உள்ளே இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொழிலாளர்கள் சிலர், தகராறில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவர்களை சமாதானம் செய்து, அ.தி.மு.க.வினரை வெளியேற செய்தனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

சிதம்பரம்

சிதம்பரத்தில் 2 போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இதில் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த ஒரு பணிமனையில் மொத்தம் 148 பஸ்கள் உள்ளன. இதில் காலை 10 மணி வரைக்கும் 38 பஸ்கள் வரைக்கும் இயக்கப்பட்டன. இதேபோல் கும்பகோணம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமாக உள்ள மற்றொரு பணிமனையில் மொத்தம் 41 பஸ்கள் உள்ளன. இதில் 2 பஸ்கள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டன.

அரசு பஸ்கள் இயக்கப்படாததால், சிதம்பரம் பஸ்நிலையம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. மேலும் தனியார் பஸ்கள் மட்டும் வழக்கம் போல் ஓடின. அதில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தொடர்ந்து இந்த 2 பணிமனைகள் முன்பும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்