கோவை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதி

கோவை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதி, தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு

Update: 2017-05-15 22:45 GMT
கோவை

கோவையில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அவர்கள் மேலும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பஸ் தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தொ.மு.ச.(எல்.பி.எப்.), சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ். பணியாளர் சங்கம், விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. எம்.எல்.எப். ஆகிய தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. ஆளும் கட்சியான அண்ணா தொழிற்சங்க (ஏ.டி.பி.) போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.

கோவை மாவட்டத்தில் கோவை சுங்கம், உக்கடம், உப்பிலிபாளையம், ஒண்டிப்புதூர், கருமத்தம்பட்டி, அன்னூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை உள்பட 17 இடங்களில் அரசு பஸ் டெப்போக்கள் உள்ளன, இவற்றிலிருந்து 794 டவுன் பஸ்களும், 313 வெளியூர் பஸ்களும், மலைபகுதிககளில் இயக்குவதற்கு 62 பஸ்களும், 131 ஸ்பேர் பஸ்களும் ஆக மொத்தம் ஆயிரத்து 300 பஸ்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பஸ்கள் நேற்று இயக்கப்படாததால் அந்த பஸ்கள் டெப்போக்களிலேயே நிறுத்தப்பட்டன.

டவுன் பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன

அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மட்டும் பஸ்களை வெளியே எடுத்துச் சென்றனர். நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பஸ்களையே நம்பி இருந்தனர். ஆனால் வெளியூர் செல்லும் அரசு பஸ்களை விட அரசு டவுன் பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் ஓடியதால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளானார்கள். கோவையில் தனியார் பஸ்கள் முழு அளவில் இயக்கப்பட்டாலும் கிராமப் பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ்கள் தான் அதிக அளவில் செல்கின்றன. ஆனால் அந்த பஸ்கள் இயக்கப்படாததால் கிராமங்களிலிருந்து வருபவர்கள் வேலைக்கு கோவைக்கு வர முடியவில்லை. கோவை நகரை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் போன்ற ஊர்களுக்கு செல்பவர்கள் கோவைக்கு டவுன் பஸ்சில் வந்து அதன் பின்னர் வெளியூர்களுக்கு செல்வார்கள், ஆனால் கிராமங்களிலிருந்து அரசு டவுன்பஸ்கள் வராததால் காலை 10 மணிக்கு பிறகு பொள்ளாச்சி, திருப்பூர், மேட்டுப்பாளையம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் இல்லை. ஆனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. போதிய அளவு பஸ்கள் இயக்கப்படாததால் கோவை காந்திபுரம், உக்கடம், சாய்பாபா காலனி, சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் பயணிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்.

கோவையிலிருந்து மேட்டுப்பாளையம். ஊட்டி, குன்னூர், கூடலூர், அன்னூர், சத்தியமங்கலம், திருப்பூர், ஈரோடு, சேலம், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, காங்கேயம், கோபி, நாமக்கல் உள்பட பல்வேறு ஊர்களுக்கு குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டன. பஸ்கள் இல்லாததால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மினி பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்கள்

அரசு பஸ்களை இயக்க எதிர்க்கட்சி தொழிற்சங்க டிரைவர், கண்டக்டர் வராததால் அந்தந்த பகுதி போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவின்பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்கள் உக்கடம் பஸ் டெப்போவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் மேற்பார்வையில் அரசு பழகுனர் வாகனத்தை ஓட்டச் சொல்லி சோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் அவர்களிடம் அரசு பஸ்களை கொடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகள் ஒட்டச் சொன்னார்கள். அதன்படி நேற்றுமதியம் 40 தனியார் பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. கனரக ஓட்டுனர் உரிமம் வைத்திருந்த 30 பேரும் நேற்று உக்கடம் டெப்போவுக்கு வந்திருந்தனர், அவர்களையும் அரசு பஸ்களை ஓட்ட வைத்து போக்குவரத்து அதிகாரிகள் பணிக்கு அமர்த்தி நிலைமையை சமாளித்தனர். ஆனால் அப்படியிருந்தும் அதிக அளவு பஸ்களை இயக்க முடியவில்லை.

கோவையில் உள்ள அனைத்து பஸ் டெப்போக்களிலும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். கோவையில் உள்ள டெப்போக்களிலிருந்து போதிய அளவு பஸ்கள் இயக்கப்படுகிறதா? என்று மாவட்ட கலெக்டர் ஹரரிகரன் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

பாலக்காட்டுக்கு பஸ்கள் ஓடவில்லை

கோவையிலிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு தினமும் 30 அரசு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று அரசு பஸ்கள் வேலை நிறுத்தத்தினால் பாலக்காடு உள்பட கேரளாவின் மற்ற பகுதிகளுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆனால் கேரள அரசு போக்குவரத்து கழக பஸ்கள் வழக்கம் போல வந்து சென்றன. அவற்றில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கேரளாவை சேர்ந்தவர்கள் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். பலர் வியாபார விஷயமாகவும் தினமும் கோவைக்கு வந்து செல்வது உண்டு. ஆனால் கோவை-கேரளா இடையே போதிய அளவு பஸ்கள் இயக்கப்படாததால் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ரெயில் மூலம் கோவை வந்தனர். இதனால் கோவை ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

கோவை மாவட்டத்தின் மற்ற பகுதிகளுக்கு தனியார் பஸ்களை இயக்குவது போல கேரளாவுக்கு தனியார் பஸ்களை இயக்க முடியாது. இதற்கு காரணம் மாநிலங்களிடையே பஸ்களை இயக்க வேண்டுமென்றால் பெர்மிட் பெற்றிருக்க வேண்டும். அதனால் கோவையிலிருந்து கேரளாவுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.

மினி பஸ்கள்

கோவை உக்கடம் பஸ் நிலையம் தவிர மற்ற பஸ் நிலையங்கள் மற்றும் கோவை நகருக்குள் மினி பஸ்கள் வர அனுமதி கிடையாது. மினி பஸ்கள் புறநகர் பகுதிகளிலிருந்து தான் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் நேற்று கோவையில் அரசு டவுன் பஸ்கள் போதிய எண்ணிக்கையில் இயக்கப்படாததால் மினி பஸ்கள் கோவை நகருக்குள் அனுமதிக்கப்பட்டன. துடியலூரில் ஓடிய மினி பஸ்கள் காந்திபுரம்-வடவள்ளி இடையே இயக்கப்பட்டன. அந்த மினி பஸ்கள் காந்திபுரம் பஸ் நிலையம் வந்து பயணிகளை ஏற்றிச் சென்றது. இதேபோல தனியார் நிறுவனங்களிடம் அவசர காலத்துக்கு பயன்படுத்தப்படும் ஸ்பேர் பஸ்களும் நேற்று டவுன் பஸ்களாக இயக்கப்பட்டன.தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்ததால் பயணிகள் மேலும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

டெப்போவுக்கு திரும்பிய பஸ்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டெப்போக்களிலிருந்தும் நேற்றுக்காலையில் பஸ்கள் வழக்கம் போல வெளியே சென்றன. ஆனால் காலை 11 மணியிலிருந்து வெளியே ஓடிய அரசு பஸ்கள் படிப்படியாக அந்தந்த டெப்போவுக்கு திருப்பி கொண்டு வரப்பட்டன.

அவற்றை அதிகாரிகள் முதலில் உள்ளே அனுமதிக்கவில்லை. உடனே எதிர்க்கட்சி தொழிற்சங்கத்தினர் அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டதால் அதன்பின்னர் அந்த பஸ்கள் டெப்போவுக்குள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டன. அரசு பஸ்களை இயக்க பள்ளி, கல்லூரி டிரைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கண்டக்டர்கள் இல்லாததால் அவற்றை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

பஸ் சிறைபிடிப்பு

கோவை உக்கடத்தில் இருந்து பீளமேடு செல்லும் ஒரு தனியார் பஸ்சில் பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் நேற்று வசூலிக்கப்பட்டது. ரூ.5 டிக்கெட்டுக்கு ரூ.10-ம், ரூ.10 டிக்கெட்டுக்கு ரூ.20-ம் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் ரெயில் நிலையம் அருகே பஸ் வந்த போது பஸ்சை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மக்களுக்கு பாதிப்பு இல்லை

அண்ணா தொழிற்சங்க கோவை மண்டல செயலாளர் சி.டி.சி. எம்.சின்னராஜ் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு தமிழக அரசு ரூ.ஆயிரத்து 250 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கு முதல்-அமைச்சர், பேரவை செயலாளர், போக்குவரத்து துறை அமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர் ஆகியோருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஊதிய ஒப்பந்தம் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சி தொழிற்சங்கத்தினர் வேண்டுமென்றே அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும், பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தவும் இந்த வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். ஓய்வு பெற்றவர்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சி தொழிற்சங்கத்தினர் வேண்டுமென்றே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து கழகத்தில் பெரும்பான்மையாக உள்ள அண்ணா தொழிற்சங்கத்தினர் பஸ்களை இயக்கி வருகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதுதவிர தனியார் பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்களை கொண்டும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து கழகத்தில் 20 ஆண்டுகளாக உள்ள பிரச்சினையை ஒரே நாளில் தீர்த்து விட முடியாது.இவ்வாறு அவர் கூறினார். அரசு பஸ்கள் வேலைநிறுத்தம் குறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 45 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. இது தவிர தனியார் பள்ளி, கல்லூரி டிரைவர்கள், தனியார் டிரைவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கொண்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து பஸ் டெப்போக்களுக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். மேலும் மினி பஸ்கள், தனியார் பஸ்களை அதிக அளவில் இயக்க அனுமதித்துள்ளோம். இதன் மூலம் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்