நாமக்கல் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.5.86 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்

நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.5 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

Update: 2017-05-15 23:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும், புதிய ரே‌ஷன்கார்டு கேட்டும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் மொத்தம் 342 மனுக்கள் வரப்பெற்றன.

நலத்திட்ட உதவிகள்

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சாலை விபத்துகளில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5½ லட்சம் நிதிஉதவி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் விலையில்லா தையல் எந்திரங்கள் மற்றும் சலவை பெட்டிகளை கலெக்டர் வழங்கினார். பின்னர் கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர், காதொலி கருவி, சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். மொத்தமாக நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 32 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 86 ஆயிரத்து 375 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பாலச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜேஸ்வரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் முரளி கிருஷ்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அசோகன், உதவி ஆணையர் (கலால்) புகழேந்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்பிரமணி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்