கரு கலைந்ததால் மனவேதனை அடைந்த ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை, திருமண நாளன்று நடந்த பரிதாபம்

கோவை அருகே கரு கலைந்ததால் மனவேதனை அடைந்த ஆசிரியை தனது திருமண நாளன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-05-15 22:30 GMT
கணபதி,

கோவையை அடுத்த சின்னவேடம்பட்டி ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 28), செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜலட்சுமி (25). பி.ஏ. பி.எட். படித்துள்ள இவர், கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ராஜலட்சுமி தனது கணவர் ஆனந்தகுமார் மற்றும் தனது மாமனார், மாமியார் ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராஜலட்சுமி கர்ப்பமானார். இதனால் அவர் பணிக்கு செல்லவில்லை.

கரு கலைந்தது

இந்த நிலையில் திடீரென்று ராஜலட்சுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இந்த வலி அதிகமாகவே அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர் பரிசோதனை செய்தபோது கரு கலைந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பினார்.

வீட்டிற்கு வந்த பின்னரும், அவர் மிகவும் சோகமாகவே இருந்துள்ளார். தனது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு இப்படி ஒரு நிலைமை ஆகிவிட்டதே என்று கூறி வருத்தப்பட்டு உள்ளார். அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதற்கிடையே ஆனந்தகுமார்-ராஜலட்சுமிக்கு நேற்று முன்தினம் திருமண நாள் ஆகும். அன்று காலையிலேயே எழுந்து ராஜலட்சுமி தனது கணவருடன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் இரவு வீட்டில் யாரும் இல்லை. ராஜலட்சுமி மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். கரு கலைந்ததால், மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, தனது அறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த ஆனந்தகுமார், தனது மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆர்.டி.ஓ. விசாரணை

தற்கொலை செய்து கொண்ட ராஜலட்சுமிக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகளே ஆவதால் அவருடைய சாவு குறித்து கோவை வடக்கு ஆர்.டி.ஓ சின்னசாமி விசாரணை நடத்தி வருகிறார். திருமண நாளன்று தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டது அந்தப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்