சூளகிரியில் பரபரப்பு மதுக்கடைக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டம்

சூளகிரியில் மதுக்கடைக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-05-15 19:16 GMT
சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பேரிகை செல்லும் சாலையில் மதுக்கடை ஒன்று கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சுமார் 100–க்கும் மேற்பட்டோர் நேற்று அந்த மதுக்கடை முன்பு திரண்டனர். இதையடுத்து அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பூட்டை எடுத்து அந்த மதுக்கடையை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கடையின் முன்பு பெண்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி தாசில்தார் பெருமாள் மற்றும் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த மதுக்கடையை நிரந்தரமாக மூடினால் தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாவட்ட டாஸ்மாக் மேலாளர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் செல்போனில் பேசி, அந்த மதுக்கடையை மூடிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் பொதுமக்கள் தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்