தந்தையை கொன்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 2 பேருக்கு தூக்குத்தண்டனை

தந்தையை கொன்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கு: 2 பேருக்கு தூக்கு, 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

Update: 2017-05-15 23:45 GMT
திருப்பூர்,

பல்லடம் அருகே தந்தையை கொன்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் விசைத்தறி உரிமையாளர் உள்பட 2 பேருக்கு தூக்குத்தண்டனையும், 3 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும் விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

விசைத்தறி தொழிலாளி

திருப்பூரை அடுத்த பல்லடத்தை சேர்ந்த 45 வயது விசைத்தறி தொழிலாளி தனது மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகனுடன் வசித்து வந்தார். இவர் பல்லடம் மாணிக்காபுரம் பாரக்காடு கண்ணன் நகரை சேர்ந்த செல்வம்(45) என்பவரின் விசைத்தறி குடோனில் வேலை செய்து வந்தார். அப்போது செல்வத்திடம் ரூ.60 ஆயிரம் முன்பணமாக அந்த தொழிலாளி வாங்கியதாக தெரிகிறது. இதில் ரூ.8 ஆயிரத்தை அந்த தொழிலாளி, தனது உரிமையாளரான செல்வத்திடம் திருப்பிக்கொடுத்துள்ளார். இந்தநிலையில் அந்த தொழிலாளிக்கு கையில் அடிபட்டதால் அவர் தறிகுடோனுக்கு செல்லாமல் இருந்துள்ளார். தனக்கு தர வேண்டிய ரூ.52 ஆயிரத்தை அந்த தொழிலாளியிடம் செல்வம் கேட்டு மிரட்டியுள்ளார். இருப்பினும் பணத்தை திருப்பிக்கொடுக்காததால் அந்த தொழிலாளியை கடத்தி பணத்தை பெற செல்வம் திட்டமிட்டார்.

இந்தநிலையில் கடந்த 5-10-2015 அன்று மாலை அந்த தொழிலாளி, 6-ம் வகுப்பு படித்து வந்த தனது 11 வயது மகளுடன் மொபட்டில் பல்லடத்தில் உள்ள கடைக்கு நோட்டு, புத்தகங்கள் வாங்க சென்றார். இதை அறிந்த செல்வம், தனது உறவினரான ராசாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி(41) மற்றும் தன்னுடைய விசைத்தறி குடோனில் ஏற்கனவே வேலை செய்து வந்த தொழிலாளிகளான நடுவேலம்பாளையம் நீலித்தோட்டத்தை சேர்ந்த நாகராஜ்(29), நாதே கவுண்டம்பாளையம் வி.கள்ளிப்பாளையத்தை சேர்ந்த ஆனந்தன்(29) ஆகியோருடன் மாணிக்காபுரம் ரோடு, அம்மாபாளையம் பிரிவு அருகே காரில் காத்திருந்தார்.

அடித்துக்கொலை

இரவு 7 மணி அளவில் தனது மகளுடன் அந்த தொழிலாளி மொபட்டில் அங்கு வந்தார். அப்போது காரில் தனது கூட்டாளிகளுடன் காத்திருந்த செல்வம் தொழிலாளியையும், அவருடைய மகளையும் மிரட்டி காரில் ஏற்றினார். தொழிலாளியின் மொபட்டையும் அவர்கள் அங்கிருந்து ஓட்டிச்சென்றனர். செல்வம் தனது விசைத்தறி குடோனுக்கு சென்றதும், சிறுமியை அருகே உள்ள தனது வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, தொழிலாளியை குடோனுக்கு அழைத்துச்சென்று பணத்தை திருப்பிக்கேட்டு 4 பேரும் சேர்ந்து கட்டையால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் கட்டையால் அடித்ததில் அந்த தொழிலாளி இறந்தார்.

தொழிலாளியின் பிணத்தை எரித்து அழிப்பதற்காக செல்வமும், தெய்வசிகாமணியும் சென்று ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி வந்தனர். காரில் தொழிலாளியின் பிணத்தை பின்புற சீட்டில் வைத்து விட்டு, தொழிலாளியின் மகளை அழைத்து காரின் முன்பக்க இருக்கையில் அமர வைத்துக்கொண்டு மங்கலம் அருகே உள்ள 63 வேலம்பாளையம் நோக்கி செல்வம் சென்றுள்ளார். காரை நிறுத்திய செல்வம், தொழிலாளியின் பிணத்தை ரோட்டோரம் இருந்த ஒரு குழிக்குள் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

சிறுமி உயிரோடு எரித்துக்கொலை

இதை காரில் இருந்த சிறுமி பார்த்து சத்தம் போட்டுள்ளாள். தந்தையின் உடலை எரித்ததை சிறுமி பார்த்து விட்டதால் அவளையும் கொலை செய்ய செல்வம் திட்டமிட்டார். இதைத்தொடர்ந்து செல்வம், சிறுமியை காரில் ஏற்றிக்கொண்டு கோவையை அடுத்த வடவள்ளி பொங்காளியூருக்கு சென்று அங்குள்ள தனது சித்தி மகன் ரங்கராஜிடம்(41) செல்போனில் விவரத்தை தெரிவித்தார். ரங்கராஜ் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு நள்ளிரவில் கொண்டு சென்று சிறுமியின் தலையில் இரும்பு கம்பியால் அடித்தனர். இதில் மயங்கி விழுந்த அந்த சிறுமியை ரங்கராஜ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் மீண்டும் சிறுமியின் தலையில் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி விட்டு காருக்குள் கேனில் இருந்த பெட்ரோலை சிறுமியின் மீது ஊற்றி தீ வைத்தனர். இதில் துடிதுடிக்க சிறுமி இறந்தாள். இதைத்தொடர்ந்து 2 பேரும் காரில் ஏறி பல்லடம் கண்ணன் நகருக்கு வந்து சேர்ந்தனர். விசைத்தறிக்குடோனில் இருந்த தொழிலாளியின் மொபட்டை எடுத்துச்சென்று மாதப்பூர் அருகே உள்ள கிணற்றில் போட்டனர். அதன்பிறகு ரங்கராஜ் கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

5 பேர் கைது

தனது கணவரையும், மகளையும் காணாத அந்த தொழிலாளியின் மனைவி அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

செல்வத்துக்கும், அந்த தொழிலாளிக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததால் செல்வத்தை பிடித்து விசாரித்தபோது அவர், தொழிலாளியையும், அவருடைய மகளையும் கொலை செய்ததை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் செல்வம், தெய்வசிகாமணி, நாகராஜ், ஆனந்தன், ரங்கராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

2 பேருக்கு தூக்கு தண்டனை

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சிறப்பு வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு தீவிர விசாரணை நடந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. செல்வத்துக்கு, தொழிலாளியையும், அவருடைய மகளையும் கடத்திய குற்றத்துக்காக தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், அபராதம் கட்டத்தவறினால் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, தொழிலாளியை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் தண்டனை, சிறுமியை கடத்தி கொலை செய்த குற்றத்துக்காக தூக்குத்தண்டனை, தடயத்தை மறைத்த குற்றத்துக்காக 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், அபராதம் கட்டத்தவறினால் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, சிறுமிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, கூட்டு சதி குற்றத்துக்கு 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை ஆகிய தண்டனைகளை விதித்து நீதிபதி(பொறுப்பு) முகமது ஜியாபுதீன் தீர்ப்பு கூறினார்.

மேலும் ரங்கராஜூக்கு, கூட்டு சதி குற்றத்துக்கு 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை, சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், சிறுமியை கொலை செய்த குற்றத்துக்காக தூக்குத்தண்டனை, தடயத்தை மறைத்த குற்றத்துக்காக 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், அபராதம் கட்டத்தவறினால் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இரட்டை ஆயுள் தண்டனை

தெய்வசிகாமணிக்கு, கூட்டு சதி குற்றத்துக்கு 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை, கடத்தல் குற்றத்துக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, கொலை குற்றத்துக்காக இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், தடயத்தை மறைத்த குற்றத்துக்காக 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

நாகராஜ், ஆனந்தன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, கடத்தல் குற்றத்துக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், கூட்டு சதி குற்றத்துக்காக தலா 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கவும் மாவட்ட கலெக்டருக்கு நீதிபதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார். 

மேலும் செய்திகள்