சைதாப்பேட்டையில் நீச்சல் குளத்தில் மூழ்கி சாப்ட்வேர் நிறுவன ஊழியர் பலி

சைதாப்பேட்டை நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் குளித்த போது தண்ணீரில் மூழ்கி சாப்ட்வேர் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-05-14 22:41 GMT
சென்னை,

சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் அப்புராஜ். இவரது மகன் பாலசுப்பிரமணியன்(வயது 24). இவர் போரூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் பாலசுப்பிரமணியன் தனது நண்பர்களுடன் சைதாப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

பரிதாப சாவு

இதைப்பார்த்த நீச்சல் குளத்தின் பயிற்சியாளரான மகேஷ் என்பவர் பாலசுப்பிரமணியனை மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து பாலசுப்பிரமணியனை அவரது நண்பர்கள் ஆம்புலன்சு மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே பாலசுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சைதாப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் பறிப்பு

* அம்பத்தூரைச்சேர்ந்த சரவணன்(36) என்பவரிடம் செல்போனை பறித்ததாக வெற்றிச்செல்வன்(25), சதீஷ்(23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

* ஆவடி பகுதியை சேர்ந்த வேல்முருகனின் முடிதிருத்தும் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம மனிதர்கள் அங்கு இருந்த ரூ.28 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

* தரமணியில் மோட்டார் சைக்கிளில் கத்தியுடன் சுற்றித்திரிந்த ராகுல்(24),தமிழரசன்(24) ஆகிய 2 வழிப்பறி கொள்ளையர்களை ரோந்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

* பெரும்பாக்கத்தில் டீக்கடை வைத்திருந்த சீனு(27) என்பவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சாலையை கடந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இறந்தார்.

* கிண்டியில் உள்ள மாநகராட்சி 170-வது வார்டு அலுவலகத்தில் வைத்திருந்த இளநிலை பொறியாளர் செந்திலின் மடிக்கணினி திருட்டுப்போனது. இதுபற்றி போலீசார் விசாரிக்கிறார்கள்.

* சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 4 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் கரன் சின்கா நேற்று உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்