ரோட்டில் பஸ்களை நிறுத்தி சுத்தம் செய்யக்கூடாது, கவர்னர் கிரண்பெடி எச்சரிக்கை

பஸ்களை ரோட்டில் நிறுத்தி சுத்தம் செய்யக் கூடாது என்று கவர்னர் கிரண்பெடி எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2017-05-14 23:15 GMT
புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் தூய்மை இந்தியா திட்ட பணிகளில் அக்கறை செலுத்தி வருகிறார். அதன்படி நேற்று அவர் வேல்ராம்பட்டு ஏரிக்கரை பகுதிக்கு சைக்கிளில் புறப்பட்டு வந்தார்.

அவர் உப்பளம் சாலையில் வந்தபோது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு ரோட்டில் தமிழக அரசு பஸ்களை நிறுத்தி சுத்தம் செய்துகொண்டிருந்தனர். இதைப்பார்த்த கவர்னர் கிரண்பெடி தனது சைக்கிளை அங்கு நிறுத்தினார்.

எச்சரிக்கை

போக்குவரத்துக் கழக அதிகாரிகளை அழைத்த அவர், ரோட்டில் நிறுத்தி பஸ்களை பராமரிப்பதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் எனவே பஸ்களை பணிமனைக்குள் நிறுத்தி சுத்தம் செய்யுங்கள். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து, இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு பார்த்துக்கொள்வதாக உறுதியளித்தனர்.

அதன்பின் கவர்னர் கிரண்பெடி வேல்ராம்பட்டு ஏரிக்கரைக்கு சென்றார். அங்கு ஏரியை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலிகளில் சில இடங்களை சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்ட அவர், அதை உடனடியாக சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஏரியை தொடர்ந்து சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சுகாதார நிலையத்தில் ஆய்வு

தொடர்ந்து அவர் முருங்கப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த டாக்டர்களிடம் பள்ளிகள்தோறும் சென்று, மாணவர்களிடம் சுகாதாரம் குறித்து விளக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது புதுவை நகராட்சி ஆணையர் கணேசன், கவர்னரின் தனிச்செயலாளர் ஸ்ரீதரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்