மராத்தி பட தயாரிப்பாளர் விஷம் குடித்து தற்கொலை ‘பேஸ்புக்’கில் உருக்கமான பதிவு

மராத்தி பட தயாரிப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் ‘பேஸ்புக்’கில் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து உருக்கமாக பதிவு செய்து உள்ளார்.

Update: 2017-05-14 21:41 GMT
புனே,

மராத்தி பட தயாரிப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் ‘பேஸ்புக்’கில் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து உருக்கமாக பதிவு செய்து உள்ளார்.

சினிமா தயாரிப்பாளர்


மராட்டிய மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் அதுல் தப்கிர். “டோல் தசா” என்ற மராத்தி படத்தை தயாரித்தவர். இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று காலை 11 மணி ஆகியும் அவர் தன் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறையின் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அறைக்குள் அதுல் தப்கிர் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய சோதனையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

உருக்கமான தகவல்கள்


இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு அவர் தனது விபரீத முடிவுக்கான காரணம் குறித்த கடிதத்தை “பேஸ்புக்” பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது, அதுல் தப்கிர் தயாரித்த “டோல் தசா” படம் சரியாக ஓடாததால் அவர் பெரும் நஷ்டத்திற்கும், கடன் சுமைக்கும் ஆளானார். இது அவரது குடும்ப வாழ்க்கையிலும் எதிரொலித்தது. அதுல் தப்கிருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு உருவானது. இந்தநிலையில் குடும்ப தகராறு தொடர்பாக அதுல் தப்கிர் மீதும், அவரது தந்தை மீதும் மனைவி போலீசில் புகார் கொடுத்தார். இதில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க போலீசார் அதுல் தப்கிரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை பறித்துள்ளனர். இவ்வாறு நெருக்கடிக்கு ஆளானதால் தான் தற்கொலை செய்துகொள்வதாக அந்த பதிவில் அதுல் தப்கிர் உருக்கமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்