கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்

Update: 2017-05-14 23:00 GMT
கடலூர்,

புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இன்று(திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன. இது தொடர்பாக சென்னையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் முன்கூட்டி நேற்று மாலையிலேயே தொடங்கியது.

கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை சுமார் 3.30 மணி அளவிலேயே அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால் வெளியில் இருந்த பஸ்கள் பணிமனைக்கு வந்த வண்ணம் இருந்தன. பணிமனைக்குள் பஸ்கள் வராமல் தடுப்பதற்காக பணிமனையின் வாசல் கதவு பூட்டப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் பணிமனைக்கு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர்கள், சாலையோரத்திலேயே நிறுத்திவிட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வேறுவழியில்லாமல் பணிமனைக்குள் பஸ்கள் செல்ல அனுமதித்தனர்.

கடலூர் புதுநகர் பஸ் நிலையத்துக்கு வந்த அரசு பஸ்களும் பயணிகளை இறக்கி விட்டு பணிமனைக்கு சென்றன. இதனால் தனியார் பஸ்கள் மட்டுமே பஸ் நிலையத்தில் நின்றன. அரசு பஸ்கள் ஓடாததால் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் பரிதவித்தனர்.

அரசு பஸ்கள் நிறுத்தம்

அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் கடலூர் மாவட்டத்தில் அரசு பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கடலூர் மாவட்டத்தைப்பொறுத்த வரையில் 497 அரசு பஸ்களும் 293 தனியார் பஸ்களும் உள்ளன. போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் தனியார் பஸ்கள் முழுவீச்சில் இயக்கப்படுகின்றன. சென்னை போன்ற வெளியூர்களுக்கும் கடலூரில் இருந்து தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் அரசு துறைகளில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களை வரவழைத்து பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. மேலும் அனைத்து பஸ் நிலையங்களிலும், பணிமனைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இது பற்றி தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல் கூறுகையில், அரசு போக்குவரத்துத்ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி அரசு பஸ்களை இயக்குவதற்குப்பதிலாக தனியார் பஸ் உரிமையாளர்கள் லாபம் சம்பாதிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவது மிகவும் கண்டனத்துக்குரியது. அரசு துறைகளில் ஓய்வு பெற்ற டிரைவர்களைக்கொண்டு அரசு பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும் ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமமானதாகும் என்றார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று மாலை முதல் குறைந்த அளவிலேயே பஸ்கள் ஓடின. மேலும் ஒருசில கிராமப்புறங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் இயக்கப்படாததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். உளுந்தூர்பேட்டையில் சாலையோரம் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. சென்னை, வேலூர், திருச்சி போன்ற வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் விழுப்புரம் பஸ்நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

இதனிடையே இன்று நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு முழு ஆதரவு திரட்டும் பணியில் ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டனர். அதாவது, விழுப்புரம் புதிய பஸ்நிலையத்திற்கு திரண்டு வந்த ஊழியர்கள், வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவதாகவும், நாளை(அதாவது இன்று) முதல் அரசு பஸ்கள் ஓடாது என்கிற அறிவிப்பு நோட்டீசை அரசு பஸ்சின் முன்புற கண்ணாடியில் ஒட்டினர்.

போலீஸ் பாதுகாப்பு

இந்த நிலையில் பஸ்நிலையத்தில் வெளியே சென்ற ஒரு பஸ்சை, ஊழியர்கள் அனைவரும் மறித்து, திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர். சிறிது நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது, பின்னர் ஊழியர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இது குறித்து தொழிலாளர் ஒருவர் கூறுகையில், இன்று(அதாவது நேற்று) மாலை முதல் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. தொடர்ந்து அனைத்து பஸ்களும் இயக்கப்படாது என்று தெரிவித்தார்.ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடந்த போதிலும், பொதுமக்கள் பாதிப்பு அடையாத வகையில் அனைத்து பஸ்களையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து பணிமனையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் விழுப்புரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்