கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரி திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரி, திற்பரப்பு போன்ற சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

Update: 2017-05-14 22:45 GMT
கன்னியாகுமரி,

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாதலம் கன்னியாகுமரி. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள். நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். அத்துடன் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் கடலில் நீராடி பகவதியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டனர்.

படகுத்துறையில் நீண்ட வரிசை

பின்னர், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டனர். இதற்காக படகுத்துறையில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

நேற்று மதியம் கடற்கரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் குறைவாக இருந்தது. மாலையில் மீண்டும் கடற்கரை பகுதி களைகட்டியது. இவர்கள் காந்தி மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம், சிறுவர் பூங்கா, சுனாமி நினைவு பூங்கா போன்ற பகுதிகளை பார்வையிட்டனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்ததால், கன்னியாகுமரி பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் ரோந்து சென்று போக்குவரத்தை சரிசெய்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திற்பரப்பு

குமரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி. இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரள போன்ற வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து செல்கிறார்கள்.

திற்பரப்புக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து, அருவியின் மேல்பகுதியில் உள்ள நீர்தேக்கத்தில் படகு சவாரி செய்தும், சிறுவர் பூங்காவில் விளையாடி, நீச்சல் குளத்தில் நீராடி குதூகலத்துடன் திரும்புகிறார்கள்.

சுற்றுலா பயணிகள் கூட்டம்

தற்போது, தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. ஆனால், குமரி மாவட்டத்தில் மலையோர பகுதியில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், திற்பரப்பு அருவியில் ஓரளவு தண்ணீர் விழுகிறது.

இந்தநிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு நேற்று திற்பரப்பில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவியில் குறைவான அளவு தண்ணீர் விழுந்ததால், மிகவும் சிரமப்பட்டு அருவியில் குளித்தனர். அதே நேரத்தில் அருகில் உள்ள நீச்சல் குளத்தில் நீராடி மகிழ்ந்தனர். இதுபோல், மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் கோட்டை போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. 

மேலும் செய்திகள்