மோசடி செய்த உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை

திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில் மோசடி செய்த உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி தனியார் நிதிநிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-05-14 22:45 GMT
திருவிடைமருதூர்,

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை ரெயில்வே சாலையில் திருமங்கலக்குடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த இந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு 18 முதல் 22 சதவீதம் வரை வட்டி வழங்கப் பட்டது. இங்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் பணத்தை டெபாசிட் செய்திருந்தனர். கடந்த சிலமாதங்களாக வாடிக்கையாளர் களுக்கு குறிப்பிட்ட தேதியில் வட்டி மற்றும் முதிர்வு தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 1-ந் தேதி நிதி நிறுவனம் திறக்கப்படாமல் இருந்தது. மேலும் உரிமையாளரையோ, பணியாளர்களையோ தொடர்பு கொள்ள முடியாததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ரூ.300 கோடி மோசடி

பலரது பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் அவர்களிடம் உள்ளதால் வாடிக்கையாளர்கள் பூட்டப்பட்ட நிறுவனத்தினை மேலும் யாரும் திறந்துவிடாமல் இருக்க கூடுதலாக பூட்டு போட்டு பூட்டி உள்ளனர். சுமார் ரூ.300 கோடி வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ள நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை கைது செய்து பணத்தை மீட்டு தரும்படி பொதுமக்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். புகார் செய்து பல நாட்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததால் நிதி நிறுவனத்தின் முன்பும், ஊழியர்களின் வீடுகளின் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நிதிநிறுவன உரிமையாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி விஜயநிர்மலா ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முற்றுகை போராட்டம்

நேற்று காலை பொதுமக்கள் தலைமறைவாக உள்ள நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தனியார் நிதிநிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாங்கள் செலுத்திய பணம் மற்றும் ஆவணங்களையும் மீட்டு தரவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதில் 50 பெண்கள் உள்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தலைமறைவாக உள்ள நிதி நிறுவன உரிமையாளரை கைது செய்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்