கரூரில் பஸ்கள் வழக்கம் போல் ஓடின

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர்

Update: 2017-05-14 22:15 GMT
கரூர்,

ஓய்வு பெற்ற போக்கு வரத்து தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர். இதுகுறித்து நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனால் நேற்று மாலை 4 மணி அளவில் பஸ்கள் வேலை நிறுத்த போராட்டம் என்ற செய்தி பரவியது. ஆனால் நேற்று மாலை கரூர் பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. அதேபோன்று இரவிலும் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இதில் பயணிகள் ஏறி அவரவர் ஊர்களுக்கு சென்றனர். இந்த நிலையில் கரூர் திருமாநிலையூரில் உள்ள அரசு பஸ் டெப்போ முன்பு கூடிய சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க கரூர் கிளை தலைவர் சிவராமன், தொழிலாளர் முன்னேற்ற சங்க கரூர் கிளை தலைவர் சதாசிவம் உள்ளிட்ட சிலர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே இன்று முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று கூறினர்.

இந்த நிலையில் நேற்று கரூர் பஸ் நிலையத்திற்கு வந்த ஏராளமான அரசு பஸ்களில் நாளை பஸ்கள் வழக்கம் போல் ஓடும், அதேபோன்று பல பஸ்களில் நாளை பஸ்கள் ஓடாது என்ற வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்