நாமக்கல் காண்டிராக்டர் தற்கொலை வழக்கு: பண்ணை வீட்டு வேலைக்காரரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான நாமக்கல் காண்டிராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வேலைக்காரரிடம் விசாரணை நடத்தினர்.

Update: 2017-05-14 19:39 GMT
நாமக்கல்,

நாமக்கல் - மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பில் வசித்து வந்தவர் காண்டிராக்டர் சுப்பிரமணியன் (வயது 58). இவர் கடந்த 8-ந் தேதி மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த மாதம் 7-ந் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் உறவினர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தபோது காண்டிராக்டர் சுப்பிரமணியன் வீட்டிலும், அமைச்சரின் நண்பர் என்ற முறையில் சோதனை நடந்தது. இந்த சோதனை தொடர்பாக கடந்த 9-ந் தேதி சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக இருந்த நிலையில், 8-ந் தேதி காண்டிராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல் தகவல் அறிக்கை

இது தொடர்பாக மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ, நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு பிரிவு) செந்தில் ஆகியோர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரியாக சென்னை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியமூர்த்தி நியமனம் செய்யப்பட்டார். இவர் நேற்று முன்தினம் நாமக்கல் வந்தார். இவரிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில், 50 பக்கங்கள் கொண்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தார். இதையடுத்து இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களின் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். பின்னர் அதனை நாமக்கல் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

விசாரணை தொடங்கியது

இந்த நிலையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியமூர்த்தி, காண்டிராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்ட பண்ணை வீட்டிற்கு சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு வேலை பார்த்து வரும் பெருமாள் என்பவரிடம் விசாரணை நடத்தினார். மேலும் விஷம் குடித்து மயக்க நிலையில் இருந்த போது, சுப்பிரமணியனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல உதவிய அருகில் உள்ள தோட்டத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரிடமும் விசாரணை நடத்தினார்.

நேற்று நடந்த சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையின் போது பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே காண்டிராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய 4 பக்க கடிதத்தை 13 பேருக்கு அனுப்பி இருப்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. எனவே அவர்களிடமும், சுப்பிரமணியன் தனது தற்கொலைக்கு இவர்கள்தான் காரணம் என கடிதத்தில் குறிப்பிட்டு உள்ள உறவினரான சக காண்டிராக்டர், வருமானவரித்துறை உயர் அதிகாரி உள்ளிட்ட நபர்களிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்