காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

Update: 2017-05-14 23:00 GMT
பென்னாகரம்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும் போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும். இதை காண தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

ஆனால், பருவமழை பொய்த்து கடும் வறட்சி நிலவுவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. இதனால் கரைபுரண்டு ஓடிய காவிரி ஆறு மற்றும் அருவிகள் வறண்டு வெறும் பாறைகளாக காட்சி அளித்ததால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. இதனால் சமையல் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

உற்சாக குளியல்

இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் வறண்டு கிடந்த மெயின் அருவியில் தண்ணீர் கொட்ட தொடங்கியது. இதை அறிந்த தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வரத்தொடங்கினர். ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 140 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதாலும், நேற்று வாரவிடுமுறை என்பதாலும் காலை முதலே ஒகேனக்கல்லுக்கு கார், இருசக்கர வாகனங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு கோடை வெயிலுக்கு இதமாக அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் வெறிச்சோடி காணப்பட்ட ஒகேனக்கல் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது. மேலும், அங்குள்ள கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்