மழைக்காலத்தில் அதிகஅளவில் நீரை சேமிக்க பெரிய கண்மாயில் மண் அள்ள அனுமதி

மழைக்காலத்தில் அதிகஅளவில் நீரை சேமிக்க ராமநாதபுரம் பெரிய கண்மாயில் படிமம், மண் அள்ள கலெக்டர் அனுமதி வழங்கி உள்ளார்.

Update: 2017-05-14 19:15 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியான சூழ்நிலையை சமாளிக்கும் விதமாகவும், நீர்நிலைகளை ஆழப்படுத்தி மழைக்காலத்தில் அதிகஅளவில் மழை நீரை சேமிக்கவும் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் வரையறுக்கப்பட்ட அளவில் படிமம், மண் ஆகியவற்றை இலவசமாக அள்ள கலெக்டர் நடராஜன் அனுமதி வழங்கி உள்ளார்.

இதன்படி நீர்நிலைகளில் உள்ள கனிமங்களை தேவைப்படும் விவசாயிகள், மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையலாம். இத்தகைய கனிமங்கள் தேவைப்படும் நபர்கள் கனிமம் கிடைக்கும் இடம் மற்றும் கொண்டு செல்ல வேண்டிய இடம் ஒரு வருவாய் கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள வருவாய் கிராமத்திலோ இருக்க வேண்டும்.

இதன்படி ராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து மண் அள்ளுவதற்காக முன் அனுமதி பெற்று தூர்வாரி மண் அள்ளும் பணி நடந்து வருகிறது.

முன் அனுமதி

இந்த பணியை பார்வையிட்ட கலெக்டர் நடராஜன் கூறியதாவது:- இந்த பணிகளின் மூலம் நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு எதிர்வரும் மழைக்காலத்தில் அதிகஅளவில் தண்ணீர் சேமிக்க ஏதுவாக நீர்நிலைகளை தயார்படுத்தவும், விவசாயிகள் இத்தகைய கனிமங்களை விளை நிலங்களில் பயன்படுத்துவதன் மூலம் விளைநிலங்கள் செழிக்கவும் வாய்ப்பாக அமைகிறது. எனவே கனிமங்கள் தேவைப்படும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் முறையாக முன் அனுமதி பெற்று பயன்பெறலாம் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்