உளுந்தூர்பேட்டை அருகே விபத்து தடுப்புச்சுவரில் கார் மோதல்; மண்டல துணை தாசில்தார் உள்பட 3 பேர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மண்டல துணை தாசில்தார் உள்பட 3 பேர் பலியாகினர்.

Update: 2017-05-14 23:00 GMT
உளுந்தூர்பேட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாககுடி கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன் மோகன்தாஸ்(வயது 50). கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வந்தார். இவர் தனது நண்பர்களுடன் திருப்பதி கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு இவர் தனது நண்பர்களான அறந்தாங்கி எல்.என்.புரத்தை சேர்ந்த தனியார் காப்பீட்டு நிறுவன முகவர் சரவணன்(35), அறந்தாங்கி நகராட்சி ஊழியர் ஜெயபால்(35), வக்கீல் குமாஸ்தா நீலகண்டன்(45), ஜெராக்ஸ் கடை உரிமையாளர் இளம்பரிதி(32), பட்டுக்கோட்டை உதயசூரியன்புரத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் செந்தில்குமார்(33) ஆகியோருடன் ஒரு காரில் திருப்பதிக்கு புறப்பட்டார். காரை சரவணன் ஓட்டினார்.

தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது

அந்த கார் நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பாலி தமிழ்நாடு சிறப்பு காவல் படை முகாம் அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி, சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.

இதில் மோகன்தாஸ், செந்தில்குமார், சரவணன் ஆகிய 3 பேரும் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். காரில் இருந்த மற்ற 3 பேரும் இடிபாட்டில் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதற்கிடையே இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த எடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வவிநாயகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி மோகன்தாஸ், சரவணன், செந்தில்குமார் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஜெயபால், நீலகண்டன், இளம்பரிதி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டார். பின்னர் அங்கு விபத்து எச்சரிக்கை பலகை அமைக்குமாறு போலீசாரை அறிவுறுத்தினார்.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்