விருதுநகர் அருகே தந்தையை வெட்டிக் கொன்ற வாலிபர் கைது

விருதுநகர் அருகே குடும்பப்பிரச்சினை காரணமாக தந்தையை கோடாரியால் வெட்டிக் கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2017-05-14 22:30 GMT
விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள நந்திரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு(வயது 57). கூலித் தொழிலாளி. இவரது மகன் ஜெயகணேஷ்(27). இவர் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இவரது மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளதால், ஜெயகணேஷ் தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.

ராமு தினந்தோறும் குடிப்போதையில் வந்து வீட்டில் தகராறு செய்து வந்தாராம். இதனால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு, மகன் ஜெயகணேசிற்கும், ராமுவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

வெட்டிக் கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவும் ராமு குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் ராமு வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே வந்த ஜெயகணேஷ் அருகில் கிடந்த கோடாரியால் ராமுவை வெட்டினார். இதில் ராமு சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆமத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து ராமுவை வெட்டிக் கொன்ற ஜெயகணேசை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்