தேசிய விருது நடிகை: முதல் சம்பளம் கடலைப் பொட்டலம்

நடிகை சுரபி லட்சுமி, டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையில் இருந்து தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.;

Update: 2017-05-14 10:17 GMT
விழாவில், திரை உலக பிரபலங்களிடம் இருந்து கிடைத்த பாராட்டுகளில் நெஞ்சம் நிறைந்துபோய் இருக்கிறார்.
மலையாள நடிகையான இவருக்கு ‘மின்னாமினுங்கு’ என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்திருக்கிறது.

சுரபி லட்சுமியிடம் பேசுவோம்:

சாரதா, மோனிஷா, ஷோபனா, மீரா போன்ற நடிகைகள் வரிசையில் நீங்களும் தேசிய விருது மூலம் இணைந்திருப்பது பற்றி என்ன நினைக் கிறீர்கள்?
“அந்த வரிசையில் நானும் இணைந்திருப்பதாக சொல்வதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அவர் கள் எல்லாம் கதாநாயகிகளாக நடித்து, தேசிய விருதினை பெற்றார் கள். நான் சின்னச்சின்ன வேடங்களிலே தோன்றியிருக் கிறேன். ஒரே ஒரு படத்தில்தான் கதாநாயகியாகியுள்ளேன்.

இன் னும் நிறைய நடிக்கவேண்டியதிருக்கிறது. கடைசி பாடத்தை முதலில் படித்துவிட்டதுபோல் இப்போது இருக்கிறது. மின்னாமினுங்கில் நடிக்கும்போது விருது கிடைக்கும் வாய்ப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. திரைக்கதையை நன்றாக படித்து, முழு சமர்ப்பண உணர்வோடு நடித்தேன். மின்னாமினுங்கு படக்குழுவுக்கே கிடைக்கவேண்டிய விருது இது..”

இந்த ஆண்டு உங்களுக்கு விருதுகள் குவியும் ஆண்டாகிவிட்டதல்லவா?
“சிறந்த நாடக நடிகைக்கான கேரள சங்கீத நாடக அகாடமி விருது, சினிமா விமர்சகர்கள் விருது.. மேலும் சில விருதுகளோடு சேர்ந்து தேசிய விருதும் கிடைத்திருக் கிறது..”

தேசிய விருது கிடைத்த செய்தி உங்களை வந்தடைந்தபோது மனநிலை எப்படி இருந்தது?

“ஒரு ஜீன்சும், இரண்டு டாப்ஸ்களையும் எடுத்துக்கொண்டு, பஞ்சாபில் உள்ள சலாலாவுக்கு விமானம் ஏறினேன். மேடை நிகழ்ச்சிக்காக அங்கு போய் சேர்ந்ததும், விழாக்குழுவினர் எனக்கு மாலை அணிவித்தார்கள். மாநில அளவிலான விருது பெற்றதற்காக என்று நான் நினைக்க, அவர்கள் தேசிய விருதுக்காக என்று கூறி, டெலிவிஷனில் செய்தி ஓடிக்கொண்டிருப்பதாக சொன்னார்கள். நானும் செய்தியை பார்த்த பின்புதான் நம்பினேன்.

நம்பியதும் தலை சுற்றியது போல் இருந்தது. கண்களில் இருந்து நீர் தாரைதாரையாய் வழிந்தது. ஒரு அசாதாரண நிலை அப்போது நீடித்தது. அவர்கள் எதுவோ கேட்க, நான் எதுவோ பதில் சொல்ல, அப்போதும் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

நமக்கு கிடைக்கவேண்டியது எந்த வழியிலாவது நமக்கு கிடைத்தே தீரும். அது எனக்கு மின்னாமினுங்கு மூலம் திரைக்கதை எழுத்தாளர் மனோஜ் ராம்சிங்- இயக்குனர் அனில் தாமஸ் வழியாக வந்தடைந் திருக்கிறது. நான் நல்ல நடிகையாக மின்னாமினுங்கு மூலம் முயற்சித்தேன். அந்த முயற்சிக்கு கிடைத்த பரிசுதான் இந்த விருது.

குடும்பத்தினருடன் சுரபி லட்சுமி


மகளுக்காகவும், வயதான தந்தைக்காகவும் வாழும் 45 வயதான விதவை கதாபாத்திரத்தில் நான் நடித்தேன். மகளை படிக்கவைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர ஏதோதோ வேலைகளை எல்லாம் நான் செய்வேன். நான் எவ்வளவோ கஷ்டங்களையும், துக்கங்களையும் கடந்து செல்வேன். படத்தில் நான் திருவனந்தபுரம் மலையாளம் பேசுவேன்..”

முதல் சம்பளம் வாங்கிய நாள் நினைவில் இருக்கிறதா?

“கேரளாவில் நாங்கள் வசித்த பகுதியில் அறுவடை முடிந்ததும் நாடோடி சர்க்கஸ் நடத்துபவர்கள் வருவார்கள். ஆண்கள், பெண் வேடம் அணிந்துகொண்டு பத்து ரூபாய்க்கு ரிக்கார்டு டான்ஸ் ஆடுவார்கள். நிறைய சாகசங்களும் செய்வார்கள். ஒருமுறை அவர்களது மேடையில் ‘குஞ்சல்லோ.. பிஞ்சு குஞ்சல்லோ..’ என்ற பாட்டுக்கு நடனம் ஆடும்படி என் தந்தை என்னை அனுப்பிவைத்தார். நான் கண் தெரியாத சிறுமியாக நன்றாக ஆடினேன்.

அப்போது எனக்கு மூன்றரை வயது. ஆடி முடித்ததும் ஒரு பாக்கெட் கடலையும், ஒரு துண்டு தர்ப்பூசணி பழமும் கிடைத்தது. அதுதான் நான் வாங்கிய முதல் சம்பளம். அப்போதே அதை சாப்பிட்டுவிட்டேன். நான் தேசிய விருது வாங்கியதால் இதெல்லாம் பெரிய சம்பவம் ஆகிவிடும். விருது வாங்கி யிருக்காவிட்டால், இதெல்லாம் ஒரு விஷயமா என்று தோன்றும்”
சினிமா வாய்ப்பு கிடைக்காமல் இருந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டதா?

“சில நேரங்களில் எனக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. எப்போதும் டைரக்டர்களை பார்ப்பதும், வாய்ப்புகள் கேட்பதும் கஷ்டமான விஷயம். அதற்கு நான் தயங்குவேன். அதே நேரத்தில் கிடைத்த வாய்ப்புகளில் நன்றாக நடித்தேன். ‘எம் 80 மூசா’ தொடரில் நடித்துக்கொண்டிருந்த மூன்றரை வருடங்களும் பிசியாக இருந்தேன். மீன் கடை முதல் நகைக்கடை வரை திறந்துவைத்தேன். மேடை நிகழ்ச்சிகள், நாடகங்கள், படிப்பு என்று அப்போது பரபரப்பாக இருந்தேன். ஆடினால்தான் ஆட்டம் வரும். பாடினால்தான் பாட்டுவரும் என்பதுபோல் நடித்து, நடித்து நடிப்பு வந்திருக்கிறது. வாய்ப்புகள் கிடைத்தால் அதை பயன்படுத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன்”

சுரபி என்கிற தனிப்பட்ட பெண்ணின் பலம், பலகீனம் என்ன?

“கலைஞர்கள் பொதுவாகவே உணர்ச்சிபூர்வமானவர்கள். நானும் அப்படித்தான். கொஞ்சம் கோபம் வரும். எதையும் முகத்திற்கு நேராக பேசிவிடுவேன். ஆனால் யாரோடும் பிரச்சினை ஏற்பட்டாலும் விரைவில் சமரசமாகிவிடுவேன். என் அம்மாவிடம்தான் நிறைய சண்டைபோடுவேன். ஆனால் இரவில் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்துவிட்டு தூங்கிவிடுவேன். என் அம்மா ரொம்ப தமாஷ் பேர்வழி. நானும் அப்படித்தான். எதையும் பாசிட்டிவ்வாக எடுத்துக்கொள்வேன்”

நீங்கள் பரதநாட்டியத்தில் பி.ஏ. பட்டம் பெற்றிருக்கிறீர்கள். எதிர் காலத்தில் நடனத்தில் உங்கள் லட்சியம்?

“நடனம், இசை, நாடகம் எல்லாவற்றையும் என் நடிப்புக்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். எனக்கு நடனத்தைவிட நடிப்பிலே நம்பிக்கை இருக்கிறது”

மேலும் செய்திகள்