நீச்சல் பயிற்சியின்போது நீரில் மூழ்கி 8 வயது சிறுமி பலி

நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொண்ட சினிமா இணை இயக்குனரின் 8 வயது மகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-05-14 00:00 GMT
சினிமா இணை இயக்குனர்

சென்னை மேற்கு அண்ணா நகர், பாடி புதுநகர், 4-வது தெருவைச் சேர்ந்தவர் பிஜூ. சினிமா துறையில் இணை இயக்குனராக உள்ளார். இவர், ‘தெகிடி’, ‘மாயவன்’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்து உள்ளார்.

இவருடைய மனைவி ஜெர்சி. இவர், தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் ஆண்டாப்(3) என்ற மகன் உள்ளான்.

இவர்களுக்கு 8 வயதில் ஆன்ட்ரியா என்ற மகளும் இருந்தார். இவர், நொளம்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது தேர்வில் தேர்ச்சி பெற்று 4-ம் வகுப்பு செல்ல இருந்தார்.

நீச்சல் பயிற்சி

சிறுமி ஆன்ட்ரியா நீச்சல் பயிற்சி பெற மிகுந்த ஆசை கொண்டு இருந்தார். தற்போது கோடை விடுமுறை என்பதால் மகளின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அவருடைய பெற்றோர், ஆன்ட்ரியாவை நீச்சல் பயிற்சி பெறுவதற்காக சென்னை முகப்பேர் மேற்கு ஜெ.ஜெ.நகர் பகுதியில் ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான வி.வி.நீச்சல் பயிற்சி மையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேர்த்து விட்டனர்.

தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை நடக்கும் நீச்சல் பயிற்சிக்கு தங்கள் மகளை பெற்றோரே அழைத்து வருவார்கள். நீச்சல் பயிற்சி முடியும் வரை அங்கேயே இருந்து பயிற்சி முடிந்ததும் மீண்டும் மகளை அழைத்துச்சென்று வீட்டில் விட்டு விட்டு அதன் பிறகே கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தனர்.

நீரில் மூழ்கி பலி

நேற்று காலை வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் தங்கள் மகள் ஆன்ட்ரியாவை நீச்சல் பயிற்சி மையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர், உடைகளை மாற்றிக்கொண்டு வழக்கம் போல் நீச்சல் பயிற்சி மேற்கொண்டார். அவருடன் 10-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் பயிற்சி பெற்று வந்தனர்.

இவர்களுக்கு பயிற்சியாளர் சீதாராமன் நீச்சல் பயிற்சி அளித்துக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென உடலில் சோர்வு ஏற்பட்டு சிறுமி ஆன்ட்ரியா நீரில் மூழ்கினார். இதில் அவர் அளவுக்கு அதிகமாக தண்ணீரை குடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதை பார்த்த பயிற்சியாளர், சிறுமியின் பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் நீச்சல் குளத்தில் மூழ்கிய சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆன்ட்ரியா மூச்சுத்திணறல் ஏற்பட்டு வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உரிமையாளரிடம் விசாரணை

மகளின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இது குறித்து ஜெ.ஜெ.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பலியான சிறுமி ஆன்ட்ரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி நீச்சல் பயிற்சி மைய உரிமையாளர் இளங்கோ மற்றும் பயிற்சியாளர் சீதாராமன் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்