வசாய், பயந்தரை இணைக்கும் வகையில் ரூ.875 கோடி செலவில் கழிமுக பாலம் கட்ட திட்டம் கடற்கரை மேலாண்மை ஆணையம் அனுமதி
வசாய், பயந்தரை இணைக்கும் வகையில் இவ்விரு பகுதிகளுக்கும் இடையே உள்ள கழிமுகத்தில் ரூ.875 கோடி செலவில் பாலத்தை கட்ட எம்.எம்.ஆர்.டி.ஏ. திட்டமிட்டுள்ளது.
மும்பை,
வசாய், பயந்தரை இணைக்கும் வகையில் இவ்விரு பகுதிகளுக்கும் இடையே உள்ள கழிமுகத்தில் ரூ.875 கோடி செலவில் பாலத்தை கட்ட எம்.எம்.ஆர்.டி.ஏ. திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மராட்டிய கடற்கரை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
அனுமதிவசாய், விரார் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சாத்திவிலி சென்று வெர்சோவா கழிமுக பாலம் வழியாக தான் பயந்தருக்கு பயணிக்கின்றனர். இந்தநிலையில் அவர்கள் எளிதில் பயந்தர் வரும் வகையில் இவ்விரு பகுதிகளுக்கும் இடையே உள்ள வசாய் கழிமுகத்தில் பாலம் கட்ட மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டு இருக்கிறது. இந்த பாலம் கட்டுவதற்கு மராட்டிய கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் (எம்.சி.இசட்.எம்.ஏ.) அனுமதி அளித்து பச்சை கொடி காட்டியுள்ளது.
ரூ.875 கோடி பாலம்வசாய் – பயந்தர் இணைப்பு பாலம் ரூ.875 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் வரும் அக்டோபரில் தொடங்கி, 4 ஆண்டுகளுக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலம் 6 வழிப்பாதைகளுடன் கட்டப்படுகிறது. இது ஒர்லி – பாந்திரா கடல்வழியில் கட்டப்பட்டது போல கம்பி பிணைப்பு தொங்கு பாலமாக கட்டப்படுகிறது. எனவே இது மும்பையின் கம்பிபிணைப்பு தொங்கு பாலம் என்ற பெருமையை பெற உள்ளது. இந்த பாலம் பயந்தர் சுபாஷ் சந்திர சவுக் பகுதியில் தொடங்கி நாய்காவில் கோன்டினோ ரோட்டுடன் இணைகிறது.
15 கி.மீ. அலைச்சல் தவிர்க்கப்படும்இந்த திட்டம் குறித்து எம்.எம்.ஆர்.டி.ஏ. மேற்பார்வை பொறியாளர் மகாதேவ் நர்கர் கூறும்போது:– தற்போது வசாய், விரார் பகுதிகளை சேர்ந்தவர் வெர்சோவா கழிமுக பாலம் வழியாக தான் பயந்தர் செல்கின்றனர். இந்த பாலம் கட்டப்பட்டால் பயந்தர் மேற்கு பகுதியில் இருந்து நாய்காவ், வசாய், விரார் பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பயனடைவார்கள். இவர்கள் சுமார் 15 கி.மீ. சுற்றுவது தவிர்க்கப்படும். வசாய், விரார் பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பாலம் அந்த நகரம் மேலும் வேகமாக வளர்ச்சியடைய உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
2–வது இணைப்பு பாலம்இந்த திட்டம் மும்பை – வசாய்– விராரை இணைக்கும் 2–வது பாலமாக அமையும். ஏற்கனவே உள்ள வெர்சோவா கழிமுக பாலம் மிகவும் பழமையானது. மேலும் வசாய் கழிமுக பாலம் கட்டப்பட்டால் வெர்சோவா கழிமுக பாலத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
இந்த திட்டம் குறித்து வசாய்– விரார் மாநகராட்சி கமிஷனர் சதீஸ் லோகன்ந்தே கூறும்போது:–
தற்போது நாங்கள் பயந்தருக்கு சாத்திவிலி வழியாக தான் செல்கிறோம். இந்த பாலம் மூலம் நாங்கள் இங்கு இருந்து நேரடியாக பயந்தருக்கு செல்ல முடியும். இதனால் பயண நேரம், எரிபொருள் செலவு மிச்சமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.