வங்கிகளில் ரூ.126 கோடி கடன் வாங்கி மோசடி தொலைதொடர்பு நிறுவன இயக்குனர் கைது சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை

வங்கிகளில் ரூ.126 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தொலைதொடர்பு நிறுவன இயக்குனரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-05-13 22:55 GMT

மும்பை,

வங்கிகளில் ரூ.126 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தொலைதொடர்பு நிறுவன இயக்குனரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.

வங்கிகளில் மோசடி

பணக்காரர்கள் வங்கிகளிடம் கடன் வாங்கி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றார்.

இதுபோன்று கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. போலீசார் தொலை தொடர்பு நிறுவன இயக்குனர் ஒருவரை கைது செய்தனர்.

அதன் விவரம் வருமாறு–

மும்பை மற்றும் ஆமதாபாத்தில் தனியார் தொலைதொடர்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொலைதொடர்பு நிறுவனத்தின் இயக்குனர் சுனில் காகட். இவர் நிறுவனத்தின் மூலம் நாட்டின் கிழக்கு மற்றும் தென்பிராந்திய பகுதிகளில் பி.எஸ்.என்.எல்.–ன் வி.வி.ஓ.பி.பி. (வாய்ஸ் அண்டு வீடியோ ஓவர் பிராட் பேண்டு) என்ற திட்டத்தை தொடங்குவதாக தெரிவித்து பாரத ஸ்டேட், கனரா, விஜயா ஆகிய வங்கிகளில் ரூ.126 கோடி கடன் வாங்கி உள்ளார்.

இயக்குனர் கைது

ஆனால் அந்த கடனை அவர் திருப்பி செலுத்தவில்லை. அவர் முறைகேடு செய்து மேற்படி 3 வங்கிகளிலும் கடன் வாங்கி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் சுனில் காகட் மீது சி.பி.ஐ. போலீசில் கடந்த 2015–ம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் சுனில் காகட் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ரூ.126 கோடி கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்