குர்லாவில் தாதா சுரேஷ் புஜாரி கூட்டாளிகள் 3 பேர் கைது துப்பாக்கியால் சுட்ட சம்பவங்களில் தொடர்புடையவர்கள்

குர்லாவில் தாதா சுரேஷ் புஜாரியின் கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் உல்லாஸ்நகர், நாலச்சோப்ராவில் துப்பாக்கியால் சுட்ட சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

Update: 2017-05-13 23:30 GMT

மும்பை,

குர்லாவில் தாதா சுரேஷ் புஜாரியின் கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் உல்லாஸ்நகர், நாலச்சோப்ராவில் துப்பாக்கியால் சுட்ட சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

துப்பாக்கியால் சுட்டனர்

தானே உல்லாஸ்நகர் கேம்ப் எண்–5 பகுதியில் உள்ள மதுபான கடைக்கு கடந்த மாதம் 27–ந் தேதி மோட்டார்சைக்கிளில் வந்த இரண்டு பேர், கடை ஊழியர்களிடம் ‘‘ உங்கள் உரிமையாளரை தாதா சுரேஷ் புஜாரிக்கு போன் செய்யுமாறு கூறுங்கள் ’’ என்று மிரட்டிவிட்டு துப்பாக்கியால் கடையை நோக்கி இரண்டு முறை சுட்டு விட்டு சென்றனர்.

இதேபோல் கடந்த 7–ந் தேதி பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா மேற்கில் உள்ள ஒரு பாருடன் கூடிய ஓட்டலுக்கு வந்த ஆசாமி ஒருவர் அங்கிருந்த காசாளரை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் அந்த நபர் இடது கையால் அங்கு இருந்த பேப்பரில் ‘நிழல் உலக தாதா சுரேஷ் புஜாரி’ என எழுதி வைத்து விட்டு சென்றார்.

இந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இதில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில், மும்பை குர்லா மேற்கு எல்.பி.எஸ். சாலை பகுதியில் தாதா சுரேஷ் புஜாரியின் கூட்டாளிகள் சிலர் வர உள்ளதாக மும்பை குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இரண்டு மோட்டார்சைக்கிள்களில் வந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து சோதனையிட்டனர்.

இதில் அவர்கள் வைத்திருந்த ஒரு துப்பாக்கி, 8 தோட்டாக்கள், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார்சைக்கிள்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த மோட்டார்சைக்கிள்கள் மற்றும் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

தாதா கூட்டாளிகள்

விசாரணையில் அவர்களது பெயர் ராஜ் சவுகான் (வயது25), அலி அப்பாஸ் (27), சுதாகர் சுந்தர் (52) என்பதும், 3 பேரும் தாதா சுரேஷ் புஜாரியின் கூட்டாளிகள் என்பதும் தெரியவந்தது.

இவர்கள் 3 பேரும் மேற்படி உல்லாஸ் நகர் மற்றும் நாலச்சோப்ராவில் சுப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் தொடர்பு இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்