கணவன் குத்திய ஈட்டி வயிற்றில் பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த பெண்
கணவன் குத்திய ஈட்டி வயிற்றில் பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த பெண் அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர்
திருச்சி
குடும்ப தகராறில் கணவன் குத்திய ஈட்டி வயிற்றில் பாய்ந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் வயிற்றில் குத்தியிருந்த ஈட்டியை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
ஈட்டியால் குத்தினார்திருச்சி துவாக்குடி வாழவந்தான்கோட்டையைச் சேர்ந்தவர் பழனியாண்டி, விவசாயி. இவருடைய மனைவி மீனா (வயது 25). காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உடைய பழனியாண்டி தினமும் மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம்போல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பழனியாண்டி, மீனாவிடம் சண்டைபோட்டார்.
இதனால் மீனா கோபித்துக்கொண்டு அருகே உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை பெற்றோர் வீட்டில் இருந்த மீனாவிடம் மீண்டும் பழனியாண்டி தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த பழனியாண்டி அருகில் இருந்த நிலங்களில் திரியும் எலியை கொல்ல உதவும் ஈட்டியை எடுத்து மீனாவின் வயிற்றில் குத்திவிட்டு தப்பியோடினார்.
அறுவை சிகிச்சைவலியால் அலறி துடித்த மீனாவை அவரது குடும்பத்தினர் வயிற்றில் குத்தியிருந்த ஈட்டியுடன் அழைத்துக்கொண்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு ஈட்டியை அகற்ற போதிய வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வயிற்றில் பாய்ந்த ஈட்டியுடன் மீனா மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு மீனாவை பரிசோதித்த டாக்டர்கள் வயிற்றில் பாய்ந்திருந்த ஈட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். அறுவை சிகிச்சை நிபுணர் தலைமையில் மருத்துவ குழுவினர் காலை 9.30 மணி அளவில் மீனாவுக்கு அறுவை சிகிச்சையை தொடங்கினர். ஒரு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் மீனா வயிற்றில் குத்தியிருந்த ஈட்டியை டாக்டர்கள் அகற்றினர்.
அதன்பின்னர் மீனா நலமுடன் உள்ளார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மனைவியை ஈட்டியால் குத்திய பழனியாண்டியை துவாக்குடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.