குளித்தலை அருகே கார் – லாரி மோதல்: புதுமாப்பிள்ளை உள்பட 7 பேர் பலி
குளித்தலை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய புதுமாப்பிள்ளை உள்பட 7 பேர் பலியானார்கள்.;
குளித்தலை
கேரள மாநிலம் மாண்டேகப்பு காசராகாடு பகுதியை சேர்ந்த பெஞ்சமின் மகன் ஆல்வினுக்கும் (வயது 27), அதே பகுதியை சேர்ந்த பிரேமாவுக்கும் (25) கடந்த 6–ந் தேதி கேரளாவில் திருமணம் நடந்தது.
இதையடுத்து திருமண வீட்டார் மற்றும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த உறவினர்கள் என மொத்தம் 11 பேர் ஒரு காரில் கேரளாவில் இருந்து வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று காலை மீண்டும் கேரளாவை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
காரை ரோஹித் என்பவர் ஓட்டினார். கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த திம்மாச்சிபுரம் அருகே சென்றபோது எதிரே கரூரில் இருந்து திருச்சியை நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.
7 பேர் பலிஇந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், குளித்தலை போலீஸ் சூப்பிரண்டு முத்துகருப்பன் மற்றும் லாலாப்பேட்டை, குளித்தலை, மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இதில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ரோஹித் (22), கெரால்டு பெஞ்சமின் (52), கேரளாவை சேர்ந்த சாண்டிரின் (40), ரீமா (30), சனானோ (10) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிசில்லா (45), புதுமாப்பிள்ளை ஆல்வின் ஆகியோரும் இறந்தனர்.
2 பேர் படுகாயம்படுகாயம் அடைந்த ஜெஸ்மா (29), புதுப்பெண் பிரேமா ஆகியோருக்கு குளித்தலை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் ரோஷன், சண்வின் (4) ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். விபத்தில் இறந்த ரோஹித்தும், உயிர் தப்பிய ரோஷனும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தை ஏற்படுத்திய லாரியை பின் தொடர்ந்து மொபட்டில் குளித்தலை பகுதியை சேர்ந்த மயில்வாகனன் (49), அவர் மகன் சுகன் (17) ஆகியோர் வந்தனர். கார் மீது லாரி மோதிய அதே நேரத்தில் லாரியின் பின்னால் மொபட் மோதியது. இதில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தால் கரூர்–திருச்சி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ரோஷன் கொடுத்த புகாரின் பேரில் லாலாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.