பொள்ளாச்சி வட்ட வழங்கல் அலுவலகத்தில் முடக்கப்பட்ட ரேஷன்கார்டுகளை மீட்க குவிந்த பொதுமக்கள்
முடக்கப்பட்ட ரேஷன்கார்டுகளை மீட்க பொள்ளாச்சி வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி தாலுகாவில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 152 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுதாரர்களுக்கு 271 ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில், மண்எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. போலி கார்டுகளை ஒழிக்க ரேஷன்கார்டுதாரர்கள் ஒவ்வொருவரும் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.
ரேஷன் கடையில் வாங்கப்படும் பொருட்கள் குறித்து நுகர்வோருக்கு குறுஞ்செய்தி மூலம் அறிந்து கொள்ள செல்போன் எண்ணும் கட்டாயம் பதிவு செய்யப்படுகிறது. பொள்ளாச்சி தாலுகாவில் ஆதார் அடையாள அட்டை எடுத்து அதனை உரிய ரேஷன் கடைகளில் பதிவு செய்யாத 6 ஆயிரம் பேரின் ரேஷன் கார்டுகள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டது. அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.
வட்ட வழங்கல் அலுவலகத்தில் குவிந்த மக்கள்இதை தொடர்ந்து ரேஷன்கார்டு முடக்கப்பட்ட பொதுமக்கள் ஆதார் எண் பதிவு செய்வதற்காக அரசு இ.சேவை மையங்களை நாடினார்கள். அதன்பிறகு ஆதார் எண் வந்த உடன் தங்கள் ரேஷன்கார்டுதாரர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன்கடைக்கு சென்று ஆதார் கார்டை பதிவு செய்தனர்.
அதன்பிறகு முடக்கப்பட்ட ரேஷன்கார்டை விடுவிக்க பொள்ளாச்சி வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு வந்தனர். இங்கு தங்கள் ரேஷன்கார்டை குடிமை பொருள் அதிகாரிகளிடம் கொடுத்து இணையதளத்தில் முடக்கப்பட்ட ரேஷன்கார்டை விடுவித்து கொண்டனர். பொதுமக்கள் கொடுக்கும் ரேஷன் கார்டில் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து ரேஷன்கார்டு முடக்கத்தில் இருந்து விடுவிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதுவரை 2500 ரேஷன்கார்டுகள் முடக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆதார் எண் பதிவு செய்ய வேண்டும்இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது:–
பொள்ளாச்சி தாலுகாவில் ஸ்மார்ட் கார்டு தற்போது ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் கார்டுக்கு அவசியம் ஆதார் எண் பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண், செல்போன் எண் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு உள்ளது.
ஆதார் எண் கொடுக்காத முடக்கப்பட்ட ரேஷன்கார்டுதாரர்கள் தங்கள் ரேஷன்கார்டில் உள்ள உறுப்பினர்களின் அனைவரது ஆதார் எண்களையும், குடும்ப தலைவரின் செல்போன் எண்ணையும் உடனே பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் ரேஷன்கார்டுகளை முடக்கத்தில் இருந்து விடுவிக்க இயலும்.
இவ்வாறு அவர் கூறினார்.