மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும்போது நிதி தானாக வரும்

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும்போது புதுச்சேரிக்கு நிதி தானாக வந்து சேரும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

Update: 2017-05-13 23:30 GMT

புதுச்சேரி,

புதுவை சாரம் அஞ்சலக கட்டிட திறப்புவிழா வள்ளலார் சாலையில் உள்ள வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடந்தது. தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் சம்பத் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு புதிய அஞ்சலகத்தின் கல்வெட்டை திறந்துவைத்தார். சிறப்பாக பணியாற்றி ஊழியர்களுக்கு பரிசுகள், செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான கணக்கு அட்டை, காப்பீட்டுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:–

அஞ்சல்துறையில் 1½ லட்சம் அஞ்சலகங்களும், பல லட்சம் ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவில் எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அதில் அஞ்சலகங்களின் பங்களிப்பு இருக்கும் வகையில் பிரதமர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அஞ்சலகங்கள் மூலம் செல்வமகள் திட்டம், காப்பீடு திட்டம், ஓய்வூதிய திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் செல்வமகள் காப்பீடு திட்டத்தில் 13 லட்சத்து 83 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் இந்த எண்ணிக்கை 67 ஆயிரத்து 255 ஆக உள்ளது.

அஞ்சலக ஊழியர்கள் மகப்பேறு மருத்துவமனைகளுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் பெண் குழந்தைகள் பிறந்த தகவல் கிடைத்ததும் பெற்றோர்களை சந்தித்து செல்வமகள் திட்டத்தின் நன்மைகளை எடுத்துக்கூறி அதில் அவர்களை சேர்க்க வேண்டும்.

விபத்து காப்பீடு திட்டத்துக்கான ஆண்டு பிரீமியம் ரூ.12 மட்டுமே. இந்த காப்பீடு மூலம் விபத்து ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரை கிடைக்கும். இந்த திட்டத்தில் தமிழகத்தில் 45 ஆயிரத்து 828 பேர் சேர்ந்துள்ளனர். புதுச்சேரியில் 5 ஆயிரத்து 454 பேர் சேர்ந்துள்ளனர். பாமர மக்களை இந்த திட்டத்தில் அதிகமாக சேர்க்கவேண்டும்.

அஞ்சல் ஊழியர்களின் பொறுப்பு

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு அஞ்சல் ஊழியர்களுக்கு உள்ளது. பென்‌ஷன் திட்டத்தில் 40 வயதுக்குள் சேர்ந்தால் வயது முதிர்ந்த காலத்தில் மாதந்தோறும் ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை பெறலாம்.

தமிழகத்தில் இந்த திட்டத்தில் 97 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். ஆனால் புதுச்சேரியில் 179 பேர்தான் சேர்ந்துள்ளனர். அடுத்த ஓராண்டிற்குள் 17 ஆயிரம் பேரையாவது இதில் சேர்க்க வேண்டும்.

முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, மத்திய அரசிடம் நிதிபெற உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும்போது புதுச்சேரிக்கு செல்வம் (நிதி) தானாக வந்து சேரும்.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம், எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், போலீஸ் ஐ.ஜி. கண்ணன் ஜெகதீசன், முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் அகில் நாயர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை தலைவர் (தபால் மற்றும் வணிக மேம்பாடு) வெங்கடேஸ்வரலு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்