6 ஆண்டுகளுக்கு முன் நடந்த தேரூர் இரட்டைக் கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்

6 ஆண்டுகளுக்கு முன் தேரூரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் கூறினார்.

Update: 2017-05-13 23:00 GMT

நாகர்கோவில்

நாகர்கோவிலை அடுத்த சுசீந்திரம் அருகே உள்ள தேரூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். வன ஊழியர். அவருடைய மனைவி யோகீஸ்வரி. இவர்கள் 2 பேரும் கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டபிறகு, இரவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

தேரூர் அருகே சென்றபோது ஒரு கும்பல், ஆறுமுகம் மற்றும் யோகீஸ்வரி ஆகிய 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச்சென்றது. இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த இரட்டைக்கொலை தொடர்பாக சுசீந்திரம் போலீசார் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கிகளும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாக்கள் குறித்தும் சர்ச்சை எழுந்தன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதிலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதிலும் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஆறுமுகத்தின் குடும்பத்தினர் முன்வைத்தனர்.

தீவிர நடவடிக்கை

இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடையவர்களை விரைவாக கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையின் அதிகாரியாக அப்போதைய குளச்சல் உதவி சூப்பிரண்டாக பணியாற்றிய (தற்போதைய குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு) தர்மராஜன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை சூடுபிடித்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே உதவி சூப்பிரண்டாக இருந்த தர்மராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் இந்த வழக்கில் மீண்டும் தொய்வு ஏற்பட்டது.

சில ஆண்டுகளுக்குப்பின் தர்மராஜன் பதவி உயர்வு பெற்று, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்றதும், பத்திரிகையாளர்களை சந்தித்தபோது தேரூர் இரட்டைக் கொலை வழக்கில் தேடப்படுபவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

13 பேர் கைது

தேடப்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் உள்பட 3 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களோடு சேர்த்து இந்த வழக்கில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட வேண்டி உள்ளது. அவரையும் தனிப்படை போலீசார் நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. அவரும் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் கூறுகிறார்கள்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் கூறியதாவது:–

குற்றப்பத்திரிகை தாக்கல்

தேரூர் இரட்டைக் கொலை வழக்கில் நான் உதவி சூப்பிரண்டாக இருந்து விசாரணை நடத்தி சிலர் கைது செய்யப்பட்டனர். சிலர் கைதாகாமல் இருந்ததால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் காலதாமதம் ஆனது. நான் போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்றபிறகு இந்த வழக்கில் தேடப்பட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அதன் விளைவாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டு விட்டனர். இன்னும் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும். அவரையும் விரைவில் கைது செய்து விடுவோம்.

இல்லாவிட்டாலும் அடுத்த வாரம் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும்கூட, தலைமறைவாக உள்ளவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவோம்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் கூறினார்.

மேலும் செய்திகள்